வருமான வரித்துறை அதிகாரி சஸ்பெண்ட்?
வருமான வரித்துறை அதிகாரி சஸ்பெண்ட்?
வருமான வரித்துறை அதிகாரி சஸ்பெண்ட்?
ADDED : செப் 04, 2011 12:23 AM

சென்னை: கல்வி நிறுவன இயக்குனரிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, சி.பி.ஐ.,யிடம் சிக்கிய, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்திரா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எவரான் கல்வி நிறுவனத்தில், கடந்த மாதம் 4ம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டார் வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்திரா. அப்போது, அந்நிறுவனத்தில் 116 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதை கண்டுபிடித்தார். வரி ஏய்ப்பை வெளியில் தெரியாமல் மறைக்க, ரவீந்திரா ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கேட்க, இறுதியாக புரோக்கர் உத்தம் சந்த் போரா மூலம், 50 லட்சமாக குறைக்கப்பட்டது. இந்த லஞ்சப் பணம் 50 லட்சத்தை போராவும், எவரான் நிறுவன இயக்குனர் கி÷ஷாரும், சமீபத்தில், ரவீந்திராவின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்த போது, தகவலறிந்து வந்த சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கையும் களவுமாக பிடித்தனர். பின்பு நடந்த சோதனையில், 1.08 கோடி ரூபாய் பணம் மற்றும் 2.3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. தற்போது மூவரும், கோர்ட் உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த பல மாதங்களாக ரவீந்திராவை கண்காணித்த சி.பி.ஐ., அவர் லஞ்சம் வாங்கும்போது பிடித்துள்ள சம்பவம், வருமான வரித்துறையில் உள்ள, 'கறுப்பாடு'களை அச்சமடைய வைத்துள்ளது. இந்நிலையில், அண்டாசு ரவீந்திராவின் கைது எதற்காக என்பது உள்ளிட்ட தகவல்களை, மத்திய வருமான வரித்துறை நேரடி வரிவிதிப்பு இயக்குனரகத்திற்கு சி.பி.ஐ., அனுப்பியது. இதன் அடிப்படையில், அண்டாசு ரவீந்திரா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, விரைவில் ரவீந்திராவை சி.பி.ஐ., அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க தேவையான ஆதாரங்களையும், ஆவணங்களையும் தயாரித்து வருகின்றனர்.


