
திரும்பத் திரும்ப குண்டு வெடிப்பா? டி.எம்.வி.ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் நாட்டின், பல முக்கிய நகரங்களில் நடந்த கோர குண்டு வெடிப்புகள் சம்பந்தமாய் எடுத்த புள்ளி விவர கணக்குப்படி, 1993லிருந்து, 2010 வரை, 18 முறையும், இந்த ஆண்டு இதுவரையில், 2 முறையும், ஆக மொத்தம், 20 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
ஏலத்தைரத்து செய்யுங்கள்!அ.ரா.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மன்னர் ஆட்சிக் காலத்திலேயே, மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, குடவோலை முறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டதை நாம் அறிவோம்.ஆனால், மக்களாட்சித் தத்துவத்தில், ஊராட்சித் தலைவர் பதவி பகிரங்க ஏலம் விடப்படுகிறது. 8 லட்சத்து, 1,000 ரூபாய்க்கு, ஒரு போலீஸ்காரரின் மனைவி ஏலம் எடுத்து, அந்தப் பதவியை கைப்பற்றுகிறார். தொடர்ந்து, பல பதவிகளும், வார்டு உறுப்பினர் வரை ஏலத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.இன்று நேற்றல்ல, 2001ம் ஆண்டு முதல், இந்த நடைமுறையை, விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி ஒன்றியத்தில் உள்ள பொன்னாங்குப்பம் ஊராட்சி பின்பற்றி வருகிறது. இது, இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ள செய்தி. இது போல, இன்னும் எத்தனை கிராமங்களில் எதேச்சதிகாரப்போக்கு, அதாவது, பணம் படைத்தவன் எதையும் விலைக்கு வாங்கலாம் என்ற நிலை நிலவுகிறதோ?ஜனநாயகத்தைப் பற்றிப் பேசும் நம் அரசியல்வாதிகள், இதற்கு என்ன பதிலளிக்கப் போகின்றனர்? தேர்தல் நடைமுறைகளைச் செயல்படுத்தி, ஊழல் நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் தேர்தல் கமிஷன், இதற்கு என்ன பதில் தரப்போகிறது? சிறுகச் சிறுக பணம் கொடுத்து, வாக்காளர்களிடமிருந்து ஓட்டைப் பெறுவதும், ஒட்டுமொத்தமாக பணம் செலுத்தி, பதவிகளை கைப்பற்றுவதும், ஒன்று தானே?தேர்தல் கமிஷன் எப்போதும், அரசியல்வாதிகள் மீதே கண் வைத்துக் கொண்டிராமல், இது போல ஜனநாயகப் படுகொலை செய்பவர்களையும் கண்காணித்து, தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏலம் விடப்பட்ட பதவிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தி, அந்த ஏலத்தை ரத்து செய்யவேண்டும்.
தள்ளுபடி வேண்டும்!சொ.செல்வராஜ், கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: தள்ளுபடி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் தான். நவநாகரிக காலத்திற்கேற்ப, பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ஜவுளி ரகங்களை அறிமுகம் செய்து, தனியார் ஜவுளி நிறுவனங்களுக்கு நிகராக போட்டி போடுகிறது.மேலும், பாரம்பரிய கைத்தறி மற்றும் பட்டுச் சேலை ரகங்களை, அதிகளவில் விற்பனை செய்து, ஏழை நெசவாளர்கள் வாழ்வுக்கு வளம் சேர்த்து வருகிறது. கடந்த ஆண்டு வரை, ஆண்டு முழுமைக்கும், கோ - ஆப்டெக்சில் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், வரவிருக்கும் தீபாவளி பண்டிகை கால விற்பனைக்கு, தள்ளுபடி வழங்கப்படமாட்டாது என, செய்தி வெளியாகி உள்ளது.அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கு, கடன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடியும் இல்லை என்றால், கோ - ஆப்டெக்சின் விற்பனை, பெரும் பாதிப்புக்குள்ளாகும்.இதைத் தவிர்க்க, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போன்று, நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை அடைவதற்கு ஏதுவாக, தள்ளுபடி வழங்குவதற்கு, கைத்தறித்துறை அதிகாரிகள் மற்றும் கோ - ஆப்டெக்ஸ் நிறுவன அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
ஹசாரேக்களால் திருத்த முடியாது!ஆர்.நாராயணசாமி, பெண்ணாடத்திலிருந்து எழுதுகிறார்: 'யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்... அம்மா, அம்மா, பூமியில் யாவும் (வஞ்சம்) லஞ்சம்...' என்ற பழைய திரைப்படப் பாடல், இன்றைய அரசியலுக்கு அப்படியே பொருந்துகிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், இதற்கு விதி விலக்கா?'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், 'சிதம்பரத்தை கேட்டுத்தான் செய்தேன்' என, ராஜா கூறியிருக்கிறார். இதற்கு, கருணாநிதி சப்பைக் கட்டு கட்டுகிறார். அவர் யார் சொல்படி இதைச் செய்தார் என்பது அல்ல கேள்வி; அதனால், லஞ்சப் பணம் பெற்றது உண்மையா, இல்லையா என்பதே கேள்வி!கனிமொழி, காங்கிரசார், ராஜா இதன் மூலம் ஆதாயம் அடைந்தனரா, இல்லையா என்பதே இப்போது எழும் வினா. சிதம்பரம் ராஜினாமா செய்தால், இந்த குடி மூழ்கியா போய்விடும்; அவரை விட்டால், காங்கிரசில் வேறு ஆள் இல்லையா?இப்போது, மக்களுக்கு ஒன்று உறுதியாகத் தெரிகிறது... இவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, அரசுப் பணத்தை லபக்கி விட்டனர். அதனால் தான், அன்னா ஹசாரேவைக் கண்டால், இவர்களுக்குப் பிடிக்கவில்லை.எத்தனை அன்னா ஹசாரே வந்தாலும், இவர்களைத் திருத்த முடியாது!