/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகையில் வார்டுகள் மாறியதாக வதந்தி :திக்குமுக்காடிய அரசியல் கட்சியினர்புதுகையில் வார்டுகள் மாறியதாக வதந்தி :திக்குமுக்காடிய அரசியல் கட்சியினர்
புதுகையில் வார்டுகள் மாறியதாக வதந்தி :திக்குமுக்காடிய அரசியல் கட்சியினர்
புதுகையில் வார்டுகள் மாறியதாக வதந்தி :திக்குமுக்காடிய அரசியல் கட்சியினர்
புதுகையில் வார்டுகள் மாறியதாக வதந்தி :திக்குமுக்காடிய அரசியல் கட்சியினர்
ADDED : செப் 13, 2011 12:39 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் தலைவர் பதவி உட்பட பெண்களுக்கான பல வார்டுகள் ஆண்களுக்கும், ஆண்களுக்கான வார்டுகள் பெண்களுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக பரவிய வதந்தி கவுன்சிலர்களை மட்டுமின்றி அரசியல் கட்சியினரையும் திக்குமுக்காட வைத்தது.
புதுக்கோட்டை. நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கியது. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என்பதால் கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதுபோன்று 12 வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது புதுக்கோட்டை நகராட்சியுடன் புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்த அரசாணையும் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால், ஆண்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கான வார்டுகள் குறித்த முறையான தகவல் வெளியிடப்படவில்லை 'தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என எதிர்பார்க்கப்படுவதால் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தமட்டில் உள்ளாட்சிமன்ற பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளதில் அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது. அக்கட்சியின் சார்பில் 2,000க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு விருப்பமனு தாக்கல் செய்துள்ள அனைவரும் தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி மீண்டும் பொதுவாக மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கான பல வார்டுகள் பெண்களுக்கும், பெண்களுக்கான பல வார்டுகள் ஆண்களுக்கும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று காலை முதல் தகவல் பரவியது. அதிர்ச்சியடைந்த கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணனை நேரிலும், மொபைல் ஃபோன் மூலமாகவும் தொடர்புகொண்டு உறுதிசெய்ய முயன்றனர். இதற்கு கமிஷனரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த கவுன்சிலர்கள் என்னசெய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடினர். இதையடுத்து சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., க்களை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளனர். நேற்று மாலைவரை இதுகுறித்த எந்த தகவலும் எம்.எல்.ஏ., க்களிடமிருந்து கிடைக்கவில்லை. நகராட்சி வார்டுகள் மாற்றமா? என்பது குறித்து கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டுகள் மாற்றப்பட்டுள்ளதாக காலை முதலே வதந்திகள் பரவிவருகிறது. இதுகுறித்து கவுன்சிலர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என இதுவரை 300க்கும் மேற்பட்டோர் என்னை நேரிலும், ஃபோன் மூலமாகவும் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டனர். அவர்களுக்கு நகராட்சி வார்டுகள் மாற்றம் குறித்து அரசிடமிருந்து முறையான எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை என கூறியுள்ளேன். இதில் ஒளிவு, மறைவுக்கு எல்லாம் வேலையே இல்லை என்பதால் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.