பதவி விலகினார் பொக்ரியால்: புதிய முதல்வரானார் கந்தூரி
பதவி விலகினார் பொக்ரியால்: புதிய முதல்வரானார் கந்தூரி
பதவி விலகினார் பொக்ரியால்: புதிய முதல்வரானார் கந்தூரி

டெராடூன்:உத்தரகண்ட் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ரமேஷ் பொக்ரியால்.
உத்தரகண்ட் மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான அரசு உள்ளது. முதல்வராக ரமேஷ் பொக்ரியால் இருந்தார். அவரது அரசுக்கு எதிராக, ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டதை அடுத்து, பா.ஜ., மேலிடத் தலைவர்கள், டில்லியில், கடந்த வாரம் இதுபற்றி விவாதித்தனர். பொக்ரியால் பதவி விலக வேண்டும் என, கேட்டுக் கொண்டனர்.இந்நிலையில், முதல்வர் மாற்றம் தொடர்பாக, நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ''உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, முதல்வரை மாற்றம் செய்ய, கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளது. மாநிலத்தின் புதிய முதல்வராக கந்தூரி பதவியேற்பார்'' என்றார்.
இதையடுத்து, உத்தரகண்ட் முதல்வர் பதவியில் இருந்து, ரமேஷ் பொக்ரியால் நேற்று விலகினார். அவர், தன் ராஜினாமா கடிதத்தை, கவர்னர் மார்கரெட் ஆல்வாவிடம் ஒப்படைத்தார்.ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பொக்ரியால் கூறுகையில், ''நான் பா.ஜ., கட்சியின் தொண்டன். கட்சி என்ன விரும்புகிறதோ அதைச் செய்துள்ளேன்'' என்றார். பொக்ரியால் பதவி விலகியதை அடுத்து, புதிய முதல்வராக, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி,76, பதவியேற்றார்.
மாஜி ராணுவ அதிகாரி: வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், பா.ஜ., கட்சியின் தலைமை கொறடாவாக இருந்த மாஜி ராணுவ அதிகாரியான பி.சி.கந்தூரி, 2000ம் ஆண்டில், மத்திய அரசில் தனிப் பொறுப்புடன் கூடிய, சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றார்.பின்னர், கேபினட் அமைச்சரானார். அப்போது, வறுமை ஒழிப்புத் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டில், உத்தரகண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் நான்காவது முதல்வராகப் பதவியேற்றார்.ஆனால், 2009 லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் பா.ஜ., கட்சி தோற்றதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் முதல்வராகியுள்ளார்.