Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரேஷனில் மலிவு விலை அரிசி வழங்க செலவு...ரூ.3 லட்சம் கோடி!

ரேஷனில் மலிவு விலை அரிசி வழங்க செலவு...ரூ.3 லட்சம் கோடி!

ரேஷனில் மலிவு விலை அரிசி வழங்க செலவு...ரூ.3 லட்சம் கோடி!

ரேஷனில் மலிவு விலை அரிசி வழங்க செலவு...ரூ.3 லட்சம் கோடி!

UPDATED : ஜூலை 24, 2011 12:42 AMADDED : ஜூலை 23, 2011 11:49 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:ரேஷனில் குறைந்த விலையில் அரிசி, கோதுமை போன்றவற்றை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், மத்திய அரசுக்கு இரண்டு ஆண்டுகளில், மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும் என, அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள எந்த ஒரு நபரும், பசியால் வாடக்கூடாது என்பதற்காக, தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்கள் என, மக்களை இரு பிரிவாகப் பிரித்து, அவர்களின் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு, மிகக் குறைந்த விலையில், மாதந்தோறும் உணவுப் பொருட்களை, பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது.இந்த விவகாரத்தை ஆய்வு செய்த, தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில், கிராமப்புறங்களில் உள்ள 90 சதவீத வீடுகளுக்கும், நகர்ப்புறங்களில் உள்ள 50 சதவீத வீடுகளுக்கும், இந்த மசோதாவின் கீழ் உணவுப் பொருட்களை வினியோகிக்க, பரிந்துரை செய்தது. மாதந்தோறும் 35 கிலோ உணவுப் பொருட்களை வினியோகம் செய்யலாம் என்றும் தெரிவித்தது.

இந்த இரண்டு பிரிவிலும் உள்ளவர்களை, முன்னுரிமை மற்றும் பொது என, மேலும் இரண்டு பிரிவாகப் பிரித்து, அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தவும், தேசிய ஆலோசனை கவுன்சில் பரிந்துரை செய்தது.மத்திய உணவு அமைச்சகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாவில், தேசிய ஆலோசனை கவுன்சில் பரிந்துரைத்த பல விஷயங்கள் இடம் பெறவில்லை. உணவு அமைச்சகம் தயாரித்த மசோதாவின்படி, கிராமப்புறங்களில் உள்ள 75 சதவீத வீடுகளுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீத வீடுகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.அதேநேரத்தில், ஒரு கிலோ அரிசி, மூன்று ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை, இரண்டு ரூபாய்க்கும் வழங்க வேண்டும் என்ற தேசிய ஆலோசனை கவுன்சில் பரிந்துரையை, மத்திய உணவு அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவுக்கும், தேசிய ஆலோசனை கவுன்சிலுக்கும் இடையே, இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.தற்போது ஒரு வழியாக, இந்த மசோதா நிறைவேறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசு சார்பில் தற்போது கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவை விட, இரண்டு மடங்கு அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும்.

இதுகுறித்து, மத்திய உணவு அமைச்சர் தாமஸ் கூறியதாவது: உணவுக்கான மானிய உதவித் தொகைக்காக மட்டும், ஆண்டுக்கு 94 ஆயிரத்து 987 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, இத்திட்டத்துக்காக, மேலும் அதிகமான தொகையை அரசு முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காகவும், பொது வினியோகத் திட்டத்தை சீரமைப்பதற்காகவும், சேமிப்பு கிடங்கு மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காகவும், அதிகம் செலவிட வேண்டியிருக்கும்.உணவு பாதுகாப்பு மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒட்டு மொத்தமாக, இரண்டு ஆண்டுகளுக்கு, 2.5 லட்சம் கோடியிலிருந்து, மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும்.

இந்த விவகாரம் குறித்து, பிரதமரிடம் ஆலோசனை நடத்தினேன். அமைச்சரவைக்கு, இந்த மசோதாவை அனுப்புவதற்கு முன், மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்த மசோதா, வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இதற்கு பின், நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்படும். இதற்கு பின், மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கு, மேலும் சில கால அவகாசம் பிடிக்கும். பெரும்பாலும், அடுத்த நிதி ஆண்டிலிருந்து தான், இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு தாமஸ் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us