பட்டாசுக்கு டில்லியில் மட்டும் தடை ஏன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
பட்டாசுக்கு டில்லியில் மட்டும் தடை ஏன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
பட்டாசுக்கு டில்லியில் மட்டும் தடை ஏன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
ADDED : செப் 13, 2025 03:34 AM

'காற்று மாசு காரணமாக பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்றால், நாடு முழுதும் தான் அதை தடை செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
என்.சி.ஆர்., எனப்படும், தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து, கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
காற்று மாசு இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:
ஒரு விவகாரத்தில் ஒரு கொள்கை கொண்டுவரப் படுகிறது என்றால், அது நாடு முழுதும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். தலைநகர் டில்லிக்கு மட்டும் ஒரு தனிக் கொள்கை மற்ற பகுதிகளுக்கு வேறு கொள்கை என்றெல்லாம் இருக்கக் கூடாது, இருக்க முடியாது.
ஏனென்றால், மற்ற பகுதி களை சேர்ந்த மக்கள் எப்படி இந்திய குடிமக்களோ அதேபோலத்தான் டில்லியை சேர்ந்தவர்களும். எனவே பட்டாசு வெடிக்க தடை கேட்கும் நபர்கள் ஏன் அதற்காக நாடு முழுதும் தடை கேட்பதில்லை?
மேலும், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என சிலர் வாதங்களை முன் வைக்கின்றனர். கடந்த ஆண்டு குளிர்காலத்தின் போது பஞ்சாப் சென்றிருந்தேன். அங்கு டில்லியை விட காற்று மாசு மிகவும் மோசமாக இருந்தது.
விசாரணை
மத்திய காற்று தர மேலாண்மை ஆணையத்திடமிருந்து இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் அறிக்கை பெற்று தர உத்தரவிடுகிறேன். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை வரும் 22க்கு பட்டியலிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
வரும் அக்டோபர் 20ல் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு முன்பாகவே இந்த வழக்கை விசாரிக்க உள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -