ADDED : அக் 05, 2011 12:15 AM
சென்னை: சென்னை மாநகராட்சியின் 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, 2,470 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்கான, இறுதிப் பட்டியலை, மாநகராட்சி தேர்தல் அலுவலர், நேற்று வெளியிட்டார். மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு 3,452 பேர், மனு தாக்கல் செய்தனர். இதில், 300 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 682 பேர் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இறுதியாக, 2,470 பேர் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக, மணலி மண்டலத்தில் உள்ள 17 வது வார்டில், இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு, அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே, நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. மாதவரம் மண்டலத்திலுள்ள 23வது வார்டில் நான்கு பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 157வது வார்டில் மூன்று பேரும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் உள்ள 63வது வார்டிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள 131வது வார்டிலும் 23 வேட்பாளர்கள் நிற்கின்றனர். 25 வார்டுகளில், 18 வேட்பாளர்களுக்கு அதிகமாக போட்டியிடுவதால், இந்த வார்டுகளில் இரண்டு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. மேயர் பதவிக்கு 32 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், இரண்டு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த வார்டுகளில், மேயர் மற்றும் கவுன்சிலர்களை தேர்வு செய்ய, நான்கு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.


