அமெரிக்க நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அமெரிக்க நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அமெரிக்க நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: தி.நகரில் உள்ள அமெரிக்க நிறுவனத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, இரவு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில், 'ரமணா டவர்ஸ்' என்ற அடுக்குமாடி அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இதில், ஏழாவது முதல் ஒன்பதாவது மாடி வரை, 'டிலாய்ட் ஹஸ்கின்ஸ் அண்டு செல்ஸ்' என்ற அமெரிக்க ஆடிட்டிங் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக இ-மெயில் முகவரிக்கு, அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மூலமாகத் தகவல் வந்தது. அதில், சென்னை அலுவலகத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, நள்ளிரவு 1.30 மணிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அலுவலகப் பணியில் இருந்தவர்கள் தகவல் அளித்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு, 2 மணிக்கு வந்து, முழுமையாக தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை 6 மணி வரை தேடுதல் நீடித்தும், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் தகவல், அங்கிருந்து மும்பைக்கு அனுப்பப்பட்டு, சென்னை வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். ஐதராபாத்தில் உள்ள இந்நிறுவனத்தின் மற்றொரு கிளைக்கு, கடந்த மாதம் இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.