மத்திய அரசு அலுவலகத்தையே "நிறுவிய' பலே "போலி' ஆசாமி மீது குவியுது புகார்
மத்திய அரசு அலுவலகத்தையே "நிறுவிய' பலே "போலி' ஆசாமி மீது குவியுது புகார்
மத்திய அரசு அலுவலகத்தையே "நிறுவிய' பலே "போலி' ஆசாமி மீது குவியுது புகார்

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தை போலியாக நடத்தி வந்ததால், 40க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் தன் மகனுக்கு வேலைக்காக தேடி வந்தார்.
இந்நிலையில், நாகர்கோவில், கீழபுத்தேரியைச் சேர்ந்த, பஞ்சாபில் உள்ள பள்ளியில் முதல்வராக பணியாற்றும் கலா மற்றும் பலர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம், சென்னை, மதுரை, நாகர்கோவில், தக்கலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 பேரிடம், ஐந்து மற்றும் ஆறு லட்சம் என, பல லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தனர். புகாரில், மத்திய அரசு நிறுவனங்களான எஸ்.எம்.இ., என்.ஐ.எம்.ஐ., மற்றும் இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு பெற்றுத் தருவதாக விஜயகுமார் பணம் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
'சுழலும்' விளக்குடன் பவனி: ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் நடித்து மோசடி செய்த விஜயகுமார் குறித்த விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில், இளைஞர் நலத்துறையின் சார்பில், கிராமங்களில் செயல்படுத்தப்படும் அடிப்படை பயிற்சி பிரிவில் தன்னார்வ தொண்டராக சேர்ந்த விஜயகுமார், சிறிது சிறிதாக ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி, இளைஞர் நலத்துறையுடன் இணைந்து பயிற்சியளிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் நட்பு கிடைக்கவே, அதை பயன்படுத்தி முதலில், இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதன்பின், ஐ.ஏ.எஸ்., அதிகாரி என தன்னை பலரிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட விஜயகுமார், 'சுழலும்' சிவப்பு விளக்கு பொருத்திய காரில் அடிக்கடி வலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், பலரை நம்ப வைத்து மோசடி செய்துள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும், சென்னை பாலவாக்கம், அடையாறு மற்றும் மதுரை, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில், இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டுத் துறை போர்டுடன் கூடிய அலுவலகத்தையை தன்னிச்சையாக இவர் திறந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவற்றின் மூலம், விஜயகுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை மோசடி செய்து, வேலை வாங்கித் தருவதாக, பயிற்சியளித்து, போலியான உத்தரவும் அளித்து பணத்தை சுருட்டியுள்ளார். கிடைத்த பணத்தைக் கொண்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காலி மனைகளை வாங்கிப் போட்டுள்ளார். இவருக்கு உறுதுணையாக இருந்த மைதிலி, பழனி, சுஜய பிரபு உள்ளிட்டவர்களிடமும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.