Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"மனதில் நினைத்தால் போதும்; காத்தருள்வான்'

"மனதில் நினைத்தால் போதும்; காத்தருள்வான்'

"மனதில் நினைத்தால் போதும்; காத்தருள்வான்'

"மனதில் நினைத்தால் போதும்; காத்தருள்வான்'

ADDED : செப் 23, 2011 10:03 PM


Google News
திருப்பூர் : ''தன்னைத்தேடி வந்து கொடுத்ததால், விஷப்பாலையும் அருந்திவிட்டு, அரக்கிக்கு மோட்சம் கொடுத்தவர் கிருஷ்ணர். மனதில் அவரை நினைத்தால், பாவங்களை திருடிக்கொண்டு, நம்மை காத்தருள்வான்,'' என்று சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.'ஸ்ரீமத் பாகவதம்' உபன்யாச நிகழ்ச்சி, திருப்பூர் காயத்ரி கல்யாண மண்டபத்தில் நடந்து வருகிறது.சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது:

தேவர்களுக்காகவும், உலக மக்கள் நன்மை பெறுவதற்காகவும் பகவான் நாராயணன் எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருந்தாலும், ஆழ்வார்களும், ரிஷிகளும் துவாபரயுகத்தில் பிறந்த கிருஷ்ணரையே பெரிதும் ஏற்றிப்புகழ்கின்றனர். ராமனாக அவதரித்தபோது, சாந்தகுண மூர்த்தியாக, நேர்மையே வடிவாக வாழ்ந்தான். பகவான் கிருஷ்ணரோ, ஓரிடத்தில் பிறந்து, வேறிடத்தில் வளர்ந்து, சிறு பிள்ளையாக இருக்கும்போதே அத்தனை

அசுரர்களையும் அழித்தார். தனது மாமாவாகிய கம்சனை கொல்வதற்காக, எட்டாவது பிள்ளையாக சிறையில் பிறந்தபோதே, பகவான் தனது விளையாட்டுக்களை ஆரம்பித்து விட்டார். இரவில் பிறந்த கிருஷ்ணர், கருமை நிறத்தில் இருந்ததால், தேவகி - வசுதேவர் இருவரும் பிள்ளையை பார்க்க முடியவில்லையே என்று வருந்தினர். அப்போது, பற்கள் அனைத்தும் சந்திரன்போல் ஒளி வீச பகவான் சிரித்தாராம்; பிரகாசமான ஒளியில் கிருஷ்ணரை பார்த்த தேவகியும், வசுதேவரும், இருகரம் கூப்பி வணங்கினர்.கம்சனிடம் இருந்து கண்ணனை காப்பாற்றுவதற்காக, ஒரு கூடையில் வைத்து கோகுலம் நோக்கி தூக்கிச்சென்றார், வசுதேவர். வழியில் யமுனை குறுக்கிட்டது; வசுதேவர் ஆற்றினுள்@ள இறங்கியதும், யமுனை மேலும் மேலும் பெருக்கெடுத்தாள். வசுதேவரின் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்து, கூடையில் இருந்த கிருஷ்ணனின் பாதம் தொட்டாள் யமுனை; அவ்வளவுதான், பகவானின் பாதம் பட்டதும், யமுனையின் கர்வம் அடங்கியது; வசுதேவரின் முழங்கால் அளவு சிறு ஓடையாக யமுனை ஓடினாள்.தனது திருவடியை சரணடையும் பக்தர்களுக்கு, கர்மவினைகளை போக்கி, மேன்மைபடுத்துபவன் என்பதை சிறு குழந்தையாக இருக்கும்போதே பகவான் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தி விட்டார். கோகுலத்தில் கண்ணன் இருப்பதை அறிந்த கம்சன், அவரை அழிப்பதற்காக, பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். சிறு பிள்ளையான பகவானை அரக்கி தனது மடியில் தூக்கி வைத்து, விஷப்பால் கொடுக்க முற்பட்டாள். வீட்டில் கிடைக்காத பாலா... இவள் அரக்கி என்றாலும், தன்னைத் தேடி வந்து, தனக்காக பால் தருகிறாளே என்று குடித்தான். அவள் அரக்கி என்பதால், அவளது உயிரையும் சேர்த்து குடித்தான்.கம்சன் அனுப்பிய அத்தனை அரக்கர்களையும் கொன்றொளித்து, தனது மாமாவாகிய கம்சனையும் கொன்றார். இறுதியில் பஞ்சபாண்டவர்களை காப்பதற்காக, எத்தனையோ பொய்கள் உரைத்துள்ளார். வாழ்வில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கீதையை அருளினார்.பூமியில் பிறந்து நாம் எத்தனையோ பாவங்கள் செய்கிறோம்; மற்ற அவதாரங்களைபோல் பகவான் கிருஷ்ணர், நாம் அழைக்காமல் வருவது இல்லை. மனதில் அவனை மட்டுமே நினைக்க வேண்டும் என்று நினைப்பவன் பகவான் கிருஷ்ணன். அதனால்தான், தன்னைத்தேடி அரக்கி வந்தபோதும், எதிரி என்று நினைக்காமல், தன்னை தேடிவந்தவள் என்பதற்காக, மகிழ்ச்சியுடன் விஷப்பால் குடித்துவிட்டு, அவளுக்கு மோட்சமும் கொடுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான். பகவான் கிருஷ்ணனை நோக்கி நம் மனதை செலுத்தினால், நாம் செய்த பாவங்கள், வினைகள் அனைத்தையும் திருடிக்கொண்டு, நம்மை காத்தருள்வான்.இவ்வாறு, வேளுக்குடிகிருஷ்ணன் பேசினார்.இச்சொற்பொழிவு, இன்றுடன் நிறைவடைகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us