Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கிராமப்புற இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி:பார் கவுன்சிலில் புதிய திட்டம்

கிராமப்புற இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி:பார் கவுன்சிலில் புதிய திட்டம்

கிராமப்புற இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி:பார் கவுன்சிலில் புதிய திட்டம்

கிராமப்புற இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி:பார் கவுன்சிலில் புதிய திட்டம்

ADDED : செப் 22, 2011 01:35 AM


Google News

சென்னை:கிராமப்புறங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு, சட்டக் கல்வியில் தொடர் பயிற்சி வழங்க, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள் பயன் பெறுவர்.சட்டப் படிப்பு முடித்து, வழக்கறிஞராக, 'பிராக்டீஸ்' செய்ய வேண்டும் என்றால், முதலில் பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு எண், அடையாள அட்டை வழக்கறிஞர்களுக்கு தரப்படும். தற்போதைய விதிப்படி, பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் பெறுபவர்கள் தான், 'பிராக்டீஸ்' செய்ய முடியும்.



ஒவ்வொரு மாநிலத்திலும் பார் கவுன்சில் உள்ளது. அதன் உறுப்பினர்களை வழக்கறிஞர்கள் தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்களில் இருந்து, தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒருவர், இந்திய பார் கவுன்சிலின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.வழக்கறிஞர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து, தலைவராக செல்வம், துணைத் தலைவராக அமல்ராஜ், இந்திய பார் கவுன்சில் பிரதிநிதியாக எஸ்.பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



தமிழக வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக, புதிய திட்டங்களை மாநில பார் கவுன்சில் வகுத்துள்ளது. இளம் வழக்கறிஞர்களின் வளர்ச்சிக்கு, சட்டக் கல்வியில், தொடர் பயிற்சி வழங்குவது என, பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. கிராமப்புற இளம் வழக்கறிஞர்களை குறி வைத்து இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக, வழக்கறிஞர் தொழிலில் இருக்கும் இளைஞர்களுக்கு, இந்தப் பயிற்சி வழங்கப்படும். தாலுகா அளவில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களை அடையாளம் காண, பார் கவுன்சில் துணைத் தலைவர் அமல்ராஜ் தலைமையிலான குழு, மற்றும் உறுப்பினர்கள் ராஜராஜன், அய்யப்பமணி தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இக்குழுக்கள் தனித்தனியாக, தாலுகாக்கள் தோறும் சென்று அங்குள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து, இளம் வழக்கறிஞர்களை அடையாளம் காணும். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளம் வழக்கறிஞர்களுக்கு, பயிற்சி தேதி, இடம் பற்றிய விவரங்களை, தமிழ்நாடு பார் கவுன்சில் அனுப்பும். தாலுகா அளவில் தான், இப்பயிற்சி வகுப்புகள் நடக்கும்.நகர்ப்புறங்கள் அல்லாத பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்களுக்கு, கோர்ட்டுகளில் எப்படி வாதாடுவது? மனுக்களை எப்படி தயாரிப்பது? சாட்சிகள் விசாரணை குறித்து பயிற்சியளிக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களை கொண்டு, இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.



சனி, ஞாயிறு தினங்களில், இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கு ஆகும் செலவை, இந்திய பார் கவுன்சிலும், தமிழ்நாடு பார் கவுன்சிலும் ஏற்கிறது. ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும், 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதால், விரைவில் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு புதிய 'ஸ்டிக்கர்'வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு புதிய ஸ்டிக்கரை பார் கவுன்சில் வழங்குகிறது. பழைய ஸ்டிக்கரில், நடுப்பகுதி சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இந்த நிறம் மங்கிப் போவதால், கருப்பு, வெள்ளை நிறத்தில் புதிய ஸ்டிக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைத்த ஸ்டிக்கரை, வெயிலிலும், மழையிலும் பரிசோதித்துள்ளனர்.



வாகனங்களின் ஆர்.சி., புத்தக நகலை நேரடியாகவோ, அல்லது உள்ளூர் வழக்கறிஞர்கள் சங்கம் மூலமாகவோ, தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். கணவர் அல்லது மனைவி பெயரில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வாகனங்களின் பதிவு எண்ணை, ஸ்டிக்கரில் அச்சிட்டு, வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் அனுப்பும். இரு சக்கர வாகனத்துக்கும், கார்களுக்கும் இந்த, 'ஸ்டிக்கர்' வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்துக்கான ஸ்டிக்கருக்கு, 50 ரூபாய், கார் ஸ்டிக்கருக்கு, 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம்:இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில், 20 ஆயிரம் பேர் பயன் பெறுவர் என, எதிர்பார்க்கிறோம்.



நகர்ப்புறங்களில் இந்த பயிற்சி அளிக்கும் திட்டம் இல்லை. கிராமப்புறங்களில் உள்ள வழக்கறிஞர்களுக்கு தான் வசதி வாய்ப்புகள் குறைவு. எனவே, அவர்களை மையமாக வைத்து இதை நடத்துகிறோம். முதல் பயிற்சி வகுப்பு அக்டோபரில் நடக்கும்.மூத்த வழக்கறிஞர்களிடம் ஜூனியராக இளம் வழக்கறிஞர்கள் சேர, பார் கவுன்சில் ஏற்பாடு செய்கிறது. இதனால், குறிப்பிட்ட உதவித் தொகை அவர்களுக்கு கிடைக்கும். 'ஹாலோகிராம்' அச்சிட்ட அடையாள அட்டையை, வழக்கறிஞர்களுக்கு வழங்குகிறோம். சேமநல நிதியை, 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என, முதல்வரிடம் கோரியுள்ளோம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us