எம்.பி.,க்களை திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்: குரேஷி
எம்.பி.,க்களை திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்: குரேஷி
எம்.பி.,க்களை திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்: குரேஷி
ADDED : செப் 21, 2011 11:21 PM

புதுடில்லி: ''தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. இது போன்ற நடவடிக்கையால், ஒட்டு மொத்த அமைப்பு முறையே சீர்குலைந்து விடும்,'' என, தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.
டில்லியில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு தேவை என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இந்தியா போன்ற பெரிய நாட்டில், இப்படிப்பட்ட உரிமையை வழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாதது. லட்சக்கணக்கான வாக்காளர்கள் ஓட்டு போட்டுத் தான், எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கின்றனர். அதனால், மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கினால், நாட்டில் தேர்தல்கள் நடந்து கொண்டே இருக்கும். ஒட்டு மொத்த அமைப்பு முறையே சீர்குலைந்து விடும். இதைச் செய்வதற்கு மாறாக, தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வரலாம். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கலாம். சிறப்பான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில், அதிகமானவர்கள் ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்ற யோசனையும் சரியானதல்ல. அதை அமல்படுத்துவது கடினமான ஒன்று. இவ்வாறு குரேஷி கூறினார்.