PUBLISHED ON : செப் 22, 2011 12:00 AM

சந்திரசேகர ராவின் ஆவேச அவதாரம்!
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், பார்ப்பதற்கு மென்மையான குணம் உடையவராகத் தான் தெரிவார்; ஆனால், மேடையில் மைக் பிடித்து விட்டால், அவரது அவதாரமே வேறு மாதிரியாக இருக்கும்.
தெலுங்கானா விவகாரத்துக்கு எதிராக, யாராவது கருத்து தெரிவித்து விட்டால், அவ்வளவு தான்... ருத்ரதாண்டவமே ஆடி விடுவார். தெலுங்கானா தனி மாநிலம் அமைவதற்கு எதிராக, ஆந்திராவின் ராயல்சீமா பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தங்களின் கடுமையான அதிருப்தியை, சமீபத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரம், சந்திரசேகர ராவுக்கு தெரிந்ததும், ஐதராபாத்தில் அவசர, அவசரமாக ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும்படி, தன் கட்சியினருக்கு கட்டளையிட்டார். அவரின் அவசரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட தெலுங்கானா தொண்டர்கள், 'வார்த்தை கச்சேரி களைகட்டப் போகிறது' என, அப்போதே புரிந்து கொண்டனர். திட்டமிட்டபடி பொதுக் கூட்டம் துவங்கியது. படபடப்பான இதயத்துடன், கட்சித் தொண்டர்கள் காத்திருந்தனர். இறுதியில், சந்திரசேகர ராவ் பேசத் துவங்கினார். 'தெலுங்கானா விவகாரத்துக்கு எதிராக, இனி யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்' என, ஆவேசமாக முழங்கினார். சந்திரசேகர ராவின் வார்த்தையில் தெறித்த ஆவேசத்தைக் கண்டு, தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களே, நடுநடுங்கிப் போயினர்.