கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல் திடீர் ராஜினமா
கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல் திடீர் ராஜினமா
கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல் திடீர் ராஜினமா
ADDED : செப் 19, 2011 11:48 PM

பெங்களூரு: விதிமுறைகளை மீறி, நிலங்கள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கர்நாடக லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி சிவராஜ் பாட்டீல், தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கர்நாடக புதிய லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆகஸ்ட் 3ல், சிவராஜ் பாட்டீல் பதவியேற்றார். ஒன்றரை மாதத்தில், அவர் மீது அதிரடி குற்றச்சாட்டு எழுந்தது. லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீலுக்கு, இரண்டு கூட்டுறவு சொசைட்டிகள் மூலம், இரண்டு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு மனை, அவரது மனைவி அன்னபூர்ணாவுக்கு வயாலிகாவல் ஹவுஸ் பில்டிங் கோ ஆபரேடிவ் சொசைட்டி ஒதுக்கியது. இத்தகவல், எடியூரப்பாவின் குடும்ப நிறுவனமான தவளகிரி பிராப்பர்ட்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் குறித்து, லோக் ஆயுக்தா நடத்திய விசாரணையில் தெரிந்தது.
சிவராஜ் பாட்டீல் குடும்பத்தினருக்கு பெங்களூரில் மூன்று வீடுகள் உள்ளன. இரண்டு வீடுகள் அவரது பெயரிலும், ஒரு வீடு, அவரது மனைவி பெயரிலும் உள்ளது. 1982ல், வசந்த் நகரில், 2,400 சதுர அடியில் வீட்டு மனையும், 1994ல், அல்லால சந்திரா என்ற இடத்தில், 9,600 சதுர அடியில் மற்றொரு வீட்டு மனையை, கர்நாடக மாநில ஜுடிஷியல் டிபார்ட்மென்ட் எம்ப்ளாயிஸ் ஹவுசிங் பில்டிங் கோ ஆபரேடிவ் சொசைட்டி மூலம் வாங்கியுள்ளார்.
கடந்த, 2006ல், நாகவரா அருகில், 4,012 சதுர அடியில் வயாலிகாவல் ஹவுஸ் பில்டிங் கோ ஆபரேடிவ் சொசைட்டி மூலம் அவரது மனைவி வாங்கினார். இது, 1993ல், மாநில அரசு விதிமுறைகளுக்கு முரண்பாடானது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அவர் தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். முதல்வர் சதானந்த கவுடாவும் பதிலளிக்காமல் மவுனம் சாதித்தார். இந்நிலையில், திடீரென, நேற்று மாலை 5 மணிக்கு தன் காரில் சிவராஜ் பாட்டீல் ராஜ்பவனுக்கு சென்றார். 5.30 மணிக்கு கவர்னர் பரத்வாஜை சந்தித்து, 30 நிமிடம் பேசினார். அப்போது, தன் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார்.
பின்னர், லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நிருபர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது: என் மீது ஒன்றுக்கும் அதிகமான மனை பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 1982ல் வசந்த நகரில், கர்நாடக ஜுடிஷியல் துறை ஊழியர்கள் ஹவுசிங் பில்டிங் கூட்டுறவு சொசைட்டி மூலம், 2, 400 சதுர அடியில் மனை பெற்று வீடு கட்டினேன். இந்த சொசைட்டியில், 2, 700 உறுப்பினர்கள் உள்ளனர். ''வங்கியில் கடன் பெற்று, அப்பணத்தில் நிலம் வாங்கி, சொசைட்டியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த மனை வினியோகிக்கப்பட்டது. 1994ல் அல்லாலசந்திராவில், கர்நாடக மாநில ஜுடிஷியல் துறை ஊழியர்கள் ஹவுசிங் பில்டிங் கூட்டுறவு சொசைட்டி மூலம், 9,600 சதுர அடியில் மனை வாங்கினேன்.
''என் மனைவி, நாகவரா பகுதியில், வயாலிகாவல் ஹவுஸ் பில்டிங் கோ ஆபரேடிவ் சொசைட்டி மூலம், 4,012 சதுர அடியில் மனை வாங்கினார். இதை திருப்பி கொடுத்து விடுமாறு கூறி விட்டேன். இந்த மனைகள் அனைத்தும், அந்தந்த ஹவுசிங் சொசைட்டியின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வாங்கியுள்ளேன்.
''லோக் ஆயுக்தா நீதிபதியாக பொறுப்பேற்ற போது, என் சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளேன். இதில், எவ்வித சட்டவிதிகளும் மீறப்பட வில்லை. இருந்தாலும் என் மீது புகார் கூறப்பட்டுள்ளது. எனவே, என் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளேன். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டால், என் மனம் மிகவும் புண்பட்டுள்ளது.
இவ்வாறு சிவராஜ் பாட்டீல் கூறினாõர்.
இதையடுத்து, நிருபர்கள் கேள்வி கேட்க முற்பட்டனர். இதற்கு பதிலளிக்காமல் அவர் புறப்பட்டு சென்று விட்டார். லோக் ஆயக்தா நீதிபதியாக சிவராஜ் பாட்டீல், 47 நாள் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


