Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சி இடைத்தேர்தலில் போட்டி: ஒரு வழியாக முடிவெடுத்தது தி.மு.க.,

திருச்சி இடைத்தேர்தலில் போட்டி: ஒரு வழியாக முடிவெடுத்தது தி.மு.க.,

திருச்சி இடைத்தேர்தலில் போட்டி: ஒரு வழியாக முடிவெடுத்தது தி.மு.க.,

திருச்சி இடைத்தேர்தலில் போட்டி: ஒரு வழியாக முடிவெடுத்தது தி.மு.க.,

ADDED : செப் 19, 2011 11:41 PM


Google News
Latest Tamil News

சென்னை :''திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்; வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.



இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:



உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு எப்போது?

தேர்தல் தேதி, பொதுத் தொகுதிகள், தனித் தொகுதிகள், மகளிர் தொகுதிகள் எது என்று, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு எந்தெந்த இடங்கள் யாருக்கென்று தெரியும்; அது அவர்களுக்கும், தேர்தல் கமிஷனுக்குமான உறவு. எந்தெந்த இடங்கள் தனித் தொகுதிகள் என்பன போன்ற விவரங்கள், ஆளுங்கட்சிக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.



திருச்சி சட்டசபை இடைத்தேர்தலில் என்ன செய்யப் போகிறீர்கள்?

அங்கே நிற்கலாம் என, முடிவு செய்துள்ளோம். வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.



கருணாநிதி வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை வருமாறு:



அண்ணாதுரை பிறந்த நாளில் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லையே?

தி.மு.க., ஆட்சியில், அண்ணாதுரை பிறந்த நாளில், 10 ஆண்டுகள் சிறையில் கழித்த நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த ஆண்டு, 400 கைதிகள் தங்களுக்கு விடிவு வரும் என காத்திருந்தனர்; ஆனால், கருணை காட்டாததால் ஏமாந்து விட்டனர். வெளியே இருப்பவர்களை உள்ளே தள்ளும் வேலையில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். உள்ளே இருப்பவர்களை எங்கே விடுவிப்பர்.முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஜாமினில் வெளியே வரும் நாளில், அவரை சிறையில் வைக்க எந்த காரணங்களும் கிடைக்காமல், முதல்வரை தாக்கிப் பேசினார் என, எப்போதோ போடப்பட்ட வழக்கில் கைது செய்துள்ளனர்.



உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அ.தி.மு.க., மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கிறதே?

இலவச வினியோகம், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் முடிந்ததும், தேதியை அறிவிக்கலாம் என கால தாமதம் செய்கின்றனர். ஆனால், ஆளுங்கட்சிக்கு மட்டும் தேர்தல் கமிஷன் தனியாகத் தெரிவித்துள்ளது போலும்.கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை தராமல், 10 மேயர் வேட்பாளர்களை, அ.தி.மு.க., அறிவித்துள்ளது. ஆனால், இந்த பட்டியல் இறுதியானதல்ல என, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன. இதை அ.தி.மு.க., அல்லவா சொல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



தி.மு.க., வேட்பாளர் நேரு : தி.மு.க., வெளியிட்டுள்ள அறிவிப்பு:திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல், வரும் அக்., 13ம் தேதி நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலருமான கே.என்.நேரு போட்டியிடுவார்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில், இதே தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக நேரு போட்டியிட்டு, மறைந்த மரியம்பிச்சையிடம் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மரியம்பிச்சை, 77 ஆயிரத்த, 492 ஓட்டுகளும், நேரு, 70 ஆயிரத்து, 313 ஓட்டுகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us