கூடங்குளம் மக்களின் உணர்வு பிரதமரிடம் தெரிவிக்கப்படும்: நாராயணசாமி
கூடங்குளம் மக்களின் உணர்வு பிரதமரிடம் தெரிவிக்கப்படும்: நாராயணசாமி
கூடங்குளம் மக்களின் உணர்வு பிரதமரிடம் தெரிவிக்கப்படும்: நாராயணசாமி

திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் உணர்வு, பிரதமரிடம் தெரிவிக்கப்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இப்போராட்டத்தின் வீரியமும், போராட்டத்திற்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்நிலையில், இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீர்வு காண வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வந்தார்.
சென்னையில் தமிழக தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், நிருபர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உத்தரவின் பேரில் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். அணு உலையால் ஆபத்து இல்லை என விளக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதியம் கூடங்குளம் சென்று போராட்டக்குழுவினரை சந்திக்கிறேன். பேச்சு விவரத்திற்கு பின்னர் இறுதியான முடிவை பிரதமர் அறிவிப்பார். நல்ல தீர்வு ஏற்படும் என நம்புகிறேன். நாளை முதல்வரை சந்தித்து பேசுகிறேன் என்று தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பு முக்கியம்: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக நெல்லையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணுஉலை தொடர்பான போராட்டம் குறித்து கருத்துக்களை அறிந்தேன். அணுஉலையை பொறுத்தவரை எவ்வித பாதிப்பும் வராது என்ற நம்பகத்தன்மை எடுத்துரைக்கப்படும். மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். மின் உற்பத்தி அடுத்தக்கட்டம்தான் என்றார். மத்திய அமைச்சர் ஆலோசனையில், மாவட்ட கலெக்டர், செல்வராஜ், அணுசக்தி துறை தலைவர் என்.கே., ஜெயின், கல்பாக்கம் அணு மின் நிலைய இயக்குநர் ஏ.பி.,.ஜோஷி, கூடங்குளம் அணு மின்நிலைய வளாக இயக்குநர் காசிநாத்பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டக்குழு மறுப்பு: ராதாபுரம் டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்த மத்திய அமைச்சருடன் பேச்சு நடத்த வருமாறு அப்பகுதி தலையாரி, போராட்டக்குழுவினருக்கு அழைப்பு விடுத்தார். எனினும் கலெக்டர் உள்ளிட்டோரிடமிருந்து முறையான அழைப்பு இல்லாமல் தலையாரி மூலம் அழைப்பு விடுத்ததால், மத்திய அமைச்சருடன் பேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமைச்சருடன் பேச போராட்டக்குழு மறுப்பு தெரிவித்தது.
இடிந்தகரையில் அமைச்சர்: பேச்சுவார்த்தை நடத்த கூடங்குளம் போராட்டக்குழுவினர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சர் நாராயணசாமி இடிந்தகரை வந்து மக்களை சந்தித்தார். அங்கு உண்ணாவிரதம் இருந்த மக்களை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான உணர்வு மக்களிடம் அதிகளவில் இருப்பதை தான் உணர்ந்து கொண்டதாகவும், இதுகுறித்து பிரதமரிடம் தான் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.


