அ.தி.மு.க., ஈரோடு மேயர் வேட்பாளர் மீது அதிருப்தி: உட்கட்சி பூசலுடன் கூட்டணியிலும் வெடித்தது
அ.தி.மு.க., ஈரோடு மேயர் வேட்பாளர் மீது அதிருப்தி: உட்கட்சி பூசலுடன் கூட்டணியிலும் வெடித்தது
அ.தி.மு.க., ஈரோடு மேயர் வேட்பாளர் மீது அதிருப்தி: உட்கட்சி பூசலுடன் கூட்டணியிலும் வெடித்தது

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு, அ.தி.மு.க., வேட்பாளராக, மாவட்ட மகளிரணி செயலர் மல்லிகா பரமசிவம் அறிவிக்கப்பட்டது, உட்கட்சி மட்டுமின்றி, கூட்டணியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு, அ.தி.மு.க., வேட்பாளராக, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டச் செயலர் கே.சி.பழனிசாமி, மாநகரச் செயலர் மனோகரன், மாவட்ட மகளிரணி செயலர் மல்லிகா பரமசிவம் ஆகியோர் பெயரும், கூட்டணியில் தே.மு.தி.க., மாவட்டச் செயலர் சிவகுமார் உட்பட சிலரது பெயரும் எதிர்பார்க்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தலின் போது, ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மல்லிகா என்றே நம்பப்பட்டது. ஆனால், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜாவை எதிர்கொள்ளும் வகையில், மாவட்டச் செயலர் ராமலிங்கம், அ.தி.மு.க., தரப்பில் நிறுத்தப்பட்டார். ராமலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான மல்லிகா, மனம் உடைந்து போனார். எம்.எல்.ஏ., சீட் வாங்க, அவர் செலவழித்த தொகை அதிகம். இதுபோல், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மாநகரச் செயலர் மனோகரன் பெயர் அறிவிக்கப்பட்டது. அவரும் பிரசாரத்தை வேகமாகத் துவக்கினார். கடைசியில் தொகுதி, தே.மு.தி.க.,வுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. மனோகரன் நொந்து போனார். மேயர் பதவியைக் காட்டி, அவர் சமாதானம் செய்யப்பட்டார்.
சட்டசபைத் தேர்தலின் போது, அமைச்சர் ராமலிங்கத்தின் வெற்றிக்காக அதிகம் உழைத்தவர் கே.சி.பழனிசாமி. அமைச்சரின் நம்பிக்கை பட்டியலிலும் இடம் பெற்றார். ஈரோடு மேயராகி விடலாம் என்ற கனவில், மல்லிகா, மனோகரன், கே.சி.பழனிசாமி ஆகியோர் இருந்தனர். சசிகலாவின் ஆதரவாளர் ராமலிங்கத்தின் பார்வை, மல்லிகா மற்றும் பழனிசாமி மீது இருந்தது. செங்கோட்டையன் பார்வை, மனோகரன் மீது இருந்தது. அமைச்சர்களுக்குள் உள்ள புகைச்சல், மேயர் வேட்பாளர் தேர்வில் வெளிப்படும் என்ற பேச்சு எழுந்தது. தற்போது மல்லிகா தேர்வாகி உள்ளதால், மனோகரன் உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோல், அமைச்சர் ராமலிங்கத்துடன், பழனிசாமியின் நெருக்கம் இனி தொடருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஈரோடு நகராட்சியை இதுவரை அ.தி.மு.க., கைப்பற்றியதில்லை. ஆளுங்கட்சி என்ற தகுதியைத் தவிர, வேட்பாளர் மல்லிகாவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு ஏதுமில்லை. வேட்பாளராக மல்லிகா அறிவிக்கப்பட்டது, உட்கட்சியிலும், கூட்டணிக்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -