Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஜாமின் கோரி கனிமொழி மீண்டும் மனு: அக்., 1ல் விசாரணை

ஜாமின் கோரி கனிமொழி மீண்டும் மனு: அக்., 1ல் விசாரணை

ஜாமின் கோரி கனிமொழி மீண்டும் மனு: அக்., 1ல் விசாரணை

ஜாமின் கோரி கனிமொழி மீண்டும் மனு: அக்., 1ல் விசாரணை

UPDATED : செப் 18, 2011 04:20 AMADDED : செப் 16, 2011 11:39 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., எம்.பி., கனிமொழி, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று மீண்டும் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த ஜாமின் மனு, வரும் அக்டோபர் 1ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.



'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரிகள், இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இரண்டாவது குற்றப்பத்திரிகையில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர் 'டிவி' எம்.டி., சரத்குமார் ஆகியோரின் பெயர் இடம்பெற்றது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக கலைஞர் 'டிவி'க்கு 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில், இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில், ஜாமின் கோரி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், கனிமொழி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மே 20ல், கனிமொழி கைது செய்யப்பட்டார். தற்போது கனிமொழியும், சரத்குமாரும், டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இதற்கிடையே, கடந்த ஜூன் 20ல், சுப்ரீம் கோர்ட்டும், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்தது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான வாதம், கடந்த இரண்டு மாதங்களாக, டில்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.வாதம் முடிவடைந்த நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) இது தொடர்பாக, சிறப்பு கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாமல், விசாரணையை ஒத்தி வைப்பதாக, நீதிபதி ஒ.பி.சைனி, நேற்று முன்தினம் அறிவித்தார்.



மீண்டும் மனு:இதற்கிடையே, தங்களுக்கு ஜாமின் அளிக்கக் கோரி, கனிமொழியும், சரத் குமாரும், இரண்டாவது முறையாக, நேற்று மனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பாக, வழக்கறிஞர்கள் பிரகாஷம், அரிஸ்டாடில் ஆகியோர், சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.



கனிமொழி ஜாமின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:இரண்டு வாரங்கள் மட்டுமே கலைஞர் 'டிவி'யின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தேன். கலைஞர் 'டிவி'யின் செயல்பாடுகளில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என, விசாரணை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் 'டிவி' 200 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், நான் எந்த பயனும் அடையவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், நானோ, கலைஞர் 'டிவி'யோ, எந்த பயனும் அடையவில்லை.நான் அப்பாவி. மீடியாக்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில், என்னை தவறாக இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் நான் பதவி வகிப்பதால், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டியுள்ளது. பார்லிமென்ட் அலுவல்கள் தொடர்பாக நடக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்க வேண்டியுள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும், தலைமறைவாக மாட்டேன். பெண் எம்.பி., என்பதாலும், பள்ளி செல்லும் குழந்தையின் தாய் என்ற முறையிலும், எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும்.இவ்வாறு கனிமொழியின் ஜாமின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல், சரத்குமாரும், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களின் ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் அக்டோபர் 1ம் தேதி நடக்கவுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us