UPDATED : செப் 15, 2011 11:38 PM
ADDED : செப் 15, 2011 11:11 PM

ஜியாங்சு : சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார்.
சீனாவில் உள்ள ஜியாங்சு நகரில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் செய்னா நேவல், ஜப்பானின் அயானே குரிஹராவை சந்தித்தார்.இதன் முதல் செட்டை 21-11 எனக் கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 18-21 எனக் கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட செய்னா, 27-25 என போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் செய்னா 21-11, 18-21, 27-25 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் செய்னா, சீனாவின் இகான் வாங்கை எதிர்கொள்கிறார்.
காஷ்யப் தோல்வி:ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் காஷ்யப், டென்மார்க்கின் பீட்டர் காடேவை சந்தித்தார். இதில் காஷ்யப் 18-21, 15-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஜுவாலா-திஜு அபாரம்:கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, திஜு ஜோடி, தென் கொரியாவின் யங் டயி லீ, ஜங் இயுன் ஹா ஜோடியை சந்தித்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 21-19, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்திய ஜோடி ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சனவே தாமஸ், ருபேஷ் குமார் ஜோடி, தென் கொரியாவின் சங் ஹுயன் கோ, யோன் சியோங் யூ ஜோடியிடம் 13-21, 9-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது.