மேலவை உறுப்பினர் விடுதி திட்டத்தில் மாற்றம்:அரசின் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
மேலவை உறுப்பினர் விடுதி திட்டத்தில் மாற்றம்:அரசின் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
மேலவை உறுப்பினர் விடுதி திட்டத்தில் மாற்றம்:அரசின் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
UPDATED : செப் 14, 2011 06:41 AM
ADDED : செப் 14, 2011 01:29 AM
தமிழகத்தில், சட்ட மேலவை அமைக்கும் முடிவு கைவிடப்பட்டதை அடுத்து, இதற்காக அரசினர் தோட்டத்தில், 37 கோடி ரூபாயில் மேலவை உறுப்பினர் விடுதி கட்டும் திட்டம் மாற்றம் செய்யப்பட உள்ளது.முதலாவது இந்திய கவுன்சில் சட்டம், 1861ம் ஆண்டு இயற்றப்பட்டது.
இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணமான தமிழகத்தில், சட்டமேலவை அமைக்கப்பட்டது.
இதற்கான உறுப்பினர் நியமனத்துக்கு, தேர்தல் நடத்தும் முறை, 1909ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரத்துக்கு பின், 1947, 1969 ஆகிய ஆண்டுகளில், பெயர் மாற்றங்களுக்கு ஏற்ப, இதில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன.இதன் பின், 1986ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., எடுத்த நடவடிக்கை மூலம், தமிழகத்தில் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. இதன் பின், தி.மு.க.,வினர் தாங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதும், அது பின்னர் ஆட்சிக்கு வரும் அ.தி.மு.க.,வினரால் ரத்து செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தேர்தல் நடத்த முயற்சி:இதில், முந்தைய தி.மு.க., அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு மேலவை அமைக்க, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்களுக்காக, எம்.எல்.ஏ., விடுதி போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி கட்ட, முந்தைய அரசு முடிவு செய்தது.சட்டசபை செயலகம் மூலம், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பழைய எம்.எல்.ஏ., விடுதி கட்டடம் அமைந்திருந்த இடம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது.
புதிய விடுதி கட்டும் திட்டம்:இங்கிருந்த பழைய எம்.எல்.ஏ., விடுதி கட்டடம் இடிக்கப்பட்டு, 1.4 ஏக்கர் நிலத்தில் 10 மாடி கட்டடமாக, புதிய விடுதி கட்ட திட்டமிடப்பட்டது. லிப்ட், ஏ.சி., உடற்பயிற்சிக் கூடம், நூலகம் என அனைத்து நவீன வசதிகளுடன், ஒவ்வொன்றும் 985 சதுர அடி பரப்பளவு கொண்ட, 100 அபார்ட்மென்ட்களாக 37.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த விடுதி கட்ட திட்டமிடப்பட்டது.இதில், 78 அபார்ட்மென்ட்கள் மேலவை உறுப்பினர்களுக்கும், மீதி அபார்ட்மென்ட்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பயன்பாட்டுக்கும் இருக்கும் வகையில் உத்தேசிக்கப்பட்டது.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தைச் செயல்படுத்தும் அமைப்பாகக் கொண்டு, பொதுப்பணித் துறை மூலம் இதற்கான பணிகளை மேற்கொள்ள சட்டசபை செயலகத் துறை முடிவு செய்திருந்தது.இந்த புதிய விடுதிக்கான வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு, அண்ணா பல்கலை.,யின் கட்டட அமைப்பியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு சிறப்பு நிகழ்வாக, சி.எம்.டி.ஏ.,விடம் விரைவாக ஒப்புதல் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிறுத்தம்:இதற்கான டெண்டர் கோரும் பணிகள் நடைபெற்று, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், திட்டமிட்டபடி மேலவைத் தேர்தல் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், மேலவை உறுப்பினர் விடுதி கட்ட தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்துக்கு பணிகளைத் துவங்கும் அனுமதி வழங்குவது தடைபட்டது.இந்த நிலையில், சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, அ.தி.மு.க., அரசு பதவியேற்றது. ஆட்சிக்கு வந்தவுடன் மேலவை மீண்டும் கொண்டு வரப்படமாட்டாது என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார்.இதையடுத்து, மேலவை உறுப்பினர் தேர்தல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. மேலவையே வராதபோது, அதற்கு விடுதி எதற்கு என்ற அடிப்படையில், விடுதி கட்டும் திட்டமும் எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது.
மாற்றம்?இது குறித்து விசாரித்த போது, பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேலவை உறுப்பினர் விடுதி தேவையில்லை என்பதால், இந்த நிலத்தை வேறு எதற்குப் பயன்படுத்துவது என்பது குறித்து, அரசுதான் முடிவு செய்ய வேண்டும். புதிய தலைமைச் செயலக வளாகத்தை, மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, அதற்கேற்ப இத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து, அரசு புதிய முடிவு எடுக்கும். அது தெரிந்ததும், அதற்கேற்ப இத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். அரசின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.


