எம்.பி.,க்கள் வீட்டு வாசலில் பஜனை பாடி கெரோ : அடுத்த போராட்டத்திற்கு ஹசாரே தயார்
எம்.பி.,க்கள் வீட்டு வாசலில் பஜனை பாடி கெரோ : அடுத்த போராட்டத்திற்கு ஹசாரே தயார்
எம்.பி.,க்கள் வீட்டு வாசலில் பஜனை பாடி கெரோ : அடுத்த போராட்டத்திற்கு ஹசாரே தயார்

ஊழலுக்கு எதிராக வலுவான மசோதா கொண்டுவர வலியுறுத்தி, டில்லியில் காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம், ஆட்சியாளர்களையே ஆட்டம் காணவைத்து, வெற்றி பெற்றது. இந்நிலையில், ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்களுக்கு எதிராக, மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க துவங்கியது. கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் என்று நடவடிக்கைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, ஹசாரே அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், ஜன் லோக்பால் மசோதா தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, காந்தியவாதி அன்னா ஹசாரே தன் குழுவினருடன் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபட்டார். ஹசாரேயின் பிறந்த ஊரான, மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில் நடந்த இக்கூட்டத்தில், ஹசாரே பேசுகையில், 'ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் எப்படி நடக்கும்' என்பதை விவரித்தார்.
அவர் கூறியதாவது:மத்திய அரசு கொண்டுவந்துள்ள லோக்பால் மசோதா, மோசடித்தனமானது. அரசு தயாரித்துள்ளபடி மசோதா நிறைவேறினால், ஊழல் மேலும் அதிகரிக்கவே செய்யும். அதுதான் உண்மை. சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இப்போது நாங்கள், பார்லிமென்ட் நிலைக்குழு என்ன செய்யப்போகிறது என்பதைத்தான் பார்த்துக் கொண்டுள்ளோம்.
மக்கள் சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவை , பார்லிமென்ட் நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.,க்களில் யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம். அவ்வாறு எதிர்க்கும் எம்.பி.,க்களை பட்டியலிட்டு ஒவ்வொரு நாளைக்கு, ஒவ்வொரு எம்.பி., வீட்டு வாசல் முன் நாங்கள் கூடி, 'கெரோ' செய்வோம். அதுவும், பஜனை பாடியபடி போராட்டம் நடத்துவோம். 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடல்களை பாடுவோம். அதோடு விடப்போவதில்லை. விரைவிலோ அல்லது 2014ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், நான் பிரசாரம் மேற்கொள்வேன். 'அவர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள்' என, மக்களிடம் கேட்டுக் கொள்வேன்.
தற்போது நடக்கும் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெறப்போவது மக்களாகிய நாம்தான். ஊழலுக்கு எதிராக, மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில், என் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததும், அடுத்த மாதம் முதல், நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், அடுத்த பிரதமர் நான் தான் என்ற நினைப்பில் ஐந்தாறு பேர் உள்ளனர். எனினும், 12 நாட்கள் நீடித்த எனது உண்ணாவிரதப் போராட்ட காலத்தில், உறுதியான முடிவை மேற்கொள்ள அவர்கள் யாரும் முன்வரவில்லை. சோனியா, வெளிநாடு சென்றிருந்த நிலையில், மத்திய அரசின் நிலை அப்போது, மிகவும் விசித்திரமாக காட்சியளித்தது. வரவிருக்கும் தேர்தல்களில், வேட்பாளரை நிராகரிக்கவும், வெற்றி வேட்பாளர்களில் சரியாக செயல்படாதவர்களை வாக்காளர்கள் திரும்ப அழைக்க வகைசெய்யும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவர, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.