பாதாள சாக்கடை திட்டம் பாழாகலாமா?அரசுக்கு ஊழியர்கள் யோசனை
பாதாள சாக்கடை திட்டம் பாழாகலாமா?அரசுக்கு ஊழியர்கள் யோசனை
பாதாள சாக்கடை திட்டம் பாழாகலாமா?அரசுக்கு ஊழியர்கள் யோசனை
ADDED : செப் 11, 2011 12:40 AM
மதுரை :பாதாள சாக்கடை திட்டம் பாழாகாமல் இருக்க அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குடிநீர் வாரிய ஊழியர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி உருவானதும் கடந்த ஜூன் 24ல் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஆய்வு நடத்தினர். அதில் விடுபட்ட உள்ளாட்சிகளில் திட்டத்தை செயல்படுத்த 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.இதையடுத்து ஜூன் 30ல், 3 மாநகராட்சிகள், 118 நகராட்சிகள், 517 டவுன் பஞ்சாயத்துகள் உட்பட 638 உள்ளாட்சி நிறுவனங்களில் செப்., 9க்குள் ஆய்வு செய்து மதிப்பீடும் தயாரித்து அளிக்க உத்தரவிட்டனர். ஆனால் குடிநீர் வாரியத்தில் பொறியாளர் பற்றாக்குறை உட்பட உண்மையான சூழலை கருத்தில் கொள்ளாது உத்தரவிட்டுள்ளதால், எதிர்காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். ஏனெனில் ஆய்வு மற்றும் விரிவான திட்ட மதிப்பீட்டை முழுமையாக தயார் செய்து முடிக்க குறைந்தபட்சம் ஆறு மாதங்களாகும். இப்பணிகளில் அவசரம் காட்டினால் 638 திட்டங்களும், அதில் பயன்பெறும் ஒன்றரை கோடி மக்களும் பாதிப்படைவர். குடிநீர் வாரியத்தில் 5 தலைமை பொறியாளர் அலுவலகம், 17 வட்ட அலுவலகம், 93 கோட்ட அலுவலகம், 313 உபகோட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் செய்யும் நிலை உள்ளது. இதனால் 6 மாதங்களில் 4 உதவி பொறியாளர் செய்ய வேண்டிய திட்டத்தை, ஒரு உதவிப் பொறியாளர் 3 திட்டங்களை 70 நாளில் செய்ய வேண்டியுள்ளது. மேலும் இதுவரை ஆய்வுக்கென நிதி எதுவும் ஒதுக்கவில்லை. இதனால் பொறியாளர்கள் சொந்தமாக செலவிடுவது, மறைமுகமாக ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். எனவே முதல்வர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கூறுகின்றனர்.
குடிநீர் வாரிய ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் காந்தி, துணைத் தலைவர் கே.கே.என்.ராஜன் கூறுகையில், ''ஆய்வு, திட்ட மதிப்பீடு தயாரிக்க ஆறுமாதம் காலநீட்டிப்பு வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும். காலியிடங்களை உடனே நிரப்புவதுடன், நிதியும் ஒதுக்க வேண்டும்,'' என முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.