ADDED : செப் 04, 2011 01:42 AM
புதுச்சேரி:'புதுச்சேரியில் நூறு நாட்களில் 16 கொலைகள் நடந்துள்ளன, குண்டர்
சட்டம் கொண்டுவந்தும் கொலைகள் தொடர்கின்றன' என, நாஜிம் எம்.எல்.ஏ.,
பேசினார்.
சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரியில் நூறு
நாட்களில் 16 கொலைகள் நடந்துள்ளன. குண்டர் சட்டம் கொண்டுவந்தும் கொலைகள்
தொடர்கின்றன. இரவு நேர கடைகளால் கொலைகள் நடப்பதாகக் கூறுவது தவறு. இதில்,
முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளது போல,
குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் டெட்ரா முறை கருவிகளை வாங்கி, பயன்படுத்த
வேண்டும்.காரைக்காலுக்கு வாங்கி தரப்பட்ட டயாலிசிஸ் இயந்திரம் இதுவரை
இயக்கப்படவில்லை. காரைக்காலில் உள்ள அன்னை தெரசா மருத்துவ நிறுவனத்திற்கு
நிரந்தர கட்டட வசதி இல்லை.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கிக் கொடுத்த ரூ.5
கோடி நிதியை விரைந்து பெற்று கட்டட வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.அரசு ஊழியர்கள் கிராமப் புறங்களுக்குச் சென்று பணியாற்றுவதில்
பிரச்னை உள்ளது. நகர்ப்புறத்தில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும்
எச்.ஆர்.ஏ.,தான் இதற்குக் காரணம். இக்குறைபாட்டைக் களைய வேண்டும்.வணிக
வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வரி பாக்கி
காரணமாக மூடப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு, ஒரே முறை தீர்வு
அடிப்படையில் சுமூக முடிவு காண வேண்டும். மின் துறையை கார்ப்பரேஷனாக
மாற்றும் நடவடிக்கை ஏன் இதுவரை துவக்கப் படாமல் உள்ளது.இவ்வாறு நாஜிம்
பேசினார்.