மின் துறையை நடத்த நிதி தாருங்கள்: வாரியம் கெஞ்சல்
மின் துறையை நடத்த நிதி தாருங்கள்: வாரியம் கெஞ்சல்
மின் துறையை நடத்த நிதி தாருங்கள்: வாரியம் கெஞ்சல்

சம்பளம் கொடுக்கவே திணறும் மின் வாரியத்திற்கு, புதிய கடன்கள் தர வங்கிகள் மறுத்துவிட்டன. புதிய மின் திட்டங்களை நிறைவேற்றவும், நிர்வாகச் செலவுகளுக்கும், கூடுதல் கடன் வாங்க மின் வாரியத்திற்கு நிதி தேவைப்படுகிறது. இந்த முறை, வங்கிகளிடம் வாங்காமல், அரசுத் துறை நிறுவனங்களிடமே கடன் வாங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, தமிழக குடிநீர் வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழக தொழில் துறை, தமிழ்நாடு நகரமைப்பு நிதிக் கழகம் (டுபிட்கோ), தமிழ்நாடு தொழிலாளர் நலவாழ்வுத் துறை, இந்து சமய அறநிலையத்துறை, அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை, தமிழக பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட 35 நிறுவனங்களிடம் நிதி கேட்டு, மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து, தமிழக பவர் பைனான்ஸ் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசுத் துறைகளில் மீதமிருக்கும் நிதியை வங்கிகளில் போட்டு வைக்கின்றனர். வங்கிகளை விட அதிக வட்டி தர, தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.தற்போது, தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனத்தில், மூத்த குடிமக்கள் வைப்புத் தொகைக்கு, காலாண்டு வட்டியாக 9.83 சதவீதமும், அதிக பட்சமாக 11.02 சதவீதமும் வட்டி தருகிறோம். மற்றவர்களுக்கு, 9.58 முதல் 10.47 சதவீதம் வரை வட்டி தருகிறோம்.கூட்டு வட்டி வைப்புத்தொகைக்கு, மூத்த குடிமக்களுக்கு 9.5 சதவீதம் முதல், 13.73 வரையிலும், மற்றவர்களுக்கு 9.25 முதல், 12.91 வரையிலும் வட்டி அளிக்கிறோம். தற்போது, அரசுத் துறைகள் நிதி அளிக்க முன்வந்தால், சிறப்பு சலுகை தரத் தயாராக இருக்கிறோம்.
சொத்தை அடகு வைக்குமா மின் வாரியம்?தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனத்தில், 'லீஸ்' நிதித் திட்டம், குறிப்பிட்ட காலக்கடன் மற்றும் சொத்து அடமான முறை ஆகியவற்றில், நிதியுதவி பெற முடியும். அரசுத் துறைகளை பொருத்தவரை, தங்களிடம் மீதமான நிதியை வங்கிகளில் போட்டு, வட்டி வாங்குகின்றன. பல நிறுவனங்கள் நீண்ட கால வைப்புத் தொகையில், வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளன. இவற்றை முதிர்வு காலத்திற்கு பின்பு தான் எடுக்க முடியும். இதனால், பல துறைகள், தங்கள் நிர்வாகக் கமிட்டியை கூட்டி, முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, எரிசக்தி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சொத்து அடமான முறையில் உத்தரவாதம் பெற்று, மின் வாரியத்தில் முதலீடு செய்ய அரசுத் துறைகள் விரும்புகின்றன. ஆனால், மின் வாரியத்திற்கு தற்போது, 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் சொத்துகள் உள்ளன. இவற்றிற்கு ஏற்கனவே, 52 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இருக்கும் சொத்துகளை, புதிய நிதிக்கு உத்தரவாதமாக கொடுத்தால், ஏற்கனவே கடன் கொடுத்த வங்கிகள், தங்களுக்கும் உத்தரவாதம் கேட்டு கடனுக்கு நெருக்கடி தரும். எனவே, குறிப்பிட்ட காலக்கடன் முறையில் தான், எதிர்கால நிதியுதவி பெறப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-ஹெச்.ஷேக்மைதீன்-