ஆற்றில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் :உத்தரவுகளை மதிக்காத நகராட்சி நிர்வாகம்
ஆற்றில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் :உத்தரவுகளை மதிக்காத நகராட்சி நிர்வாகம்
ஆற்றில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் :உத்தரவுகளை மதிக்காத நகராட்சி நிர்வாகம்
ADDED : ஆக 29, 2011 10:54 PM

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி குப்பை கழிவுகளை மீண்டும் கெடிலம் ஆற்றில் கொட்டி மாசு ஏற்படுத்துவதால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சி பகுதியில் தினமும் சேறும் குப்பைக் கழிவுகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள குட்டையில் கொட்டி வந்தனர். பின் குப்பைகள் கொட்டுவதற்கு வேறு இடம் இல்லாததால் நகராட்சி பிணம் புதைக்கும் சுடுகாட்டில் மலைபோல் குப்பைகளை கொட்டி அவ்வப்போது கழிவுகளை எரித்து வந்தனர். அங்கும் மலைபோல் குப்பைகள் குவிந்ததால் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரமாக மாற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் புனிதமான கெடிலம் ஆற்றில் குப்பைகளைக் கொட்டி மாசு ஏற்படுத்தி வந்தனர்.
நகராட்சியில் இருந்து தினமும் 6 லோடு அளவில் குப்பைக் கழிவுகளை ஆற்றில் கொட்டியதால் கெடிலம் ஆறு முழுவதும் குப்பைகள் நிறைந்த பகுதியாக தூர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஐகோர்ட் நீதிபதி குலசேகரன் உத்தரவின் பேரில் மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன் கெடிலம் ஆற்றை பார்வையிட்டு கெடிலம் ஆற்றில் குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது. மீறி கொட்டி மாசு ஏற்படுத்தினால் கோர்ட் நடவடிக்கை எடுக்கும் என அப்போதைய கமிஷனர் மதிவாணனை எச்சரித்தார். அதன்பின்னர் அருகில் செங்கல் சூளைக்காக தோண்டிய பள்ளங்களில் குப்பைகளை கொட்டி வந்தனர். தற்போது மீண்டும் குப்பைகளை கெடிலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். வெள்ளத் தடுப்பு அணை கட்டும் பணிகள் நடந்து வருவதால் மேலப்பாளையம் வீராணம் பாலம் அருகில் கூட குப்பைகளை கொட்டி மாசு ஏற்படுத்தி வருகின்றனர். குப்பைகள் ஆற்றில் கொட்டப்பட்டு வருவதால் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல். நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதித்து வருகிறது. இப்பிரச்சனைக்கு கடந்த தி.மு.க., அரசும், நகராட்சி நிர்வாகமும் கமிஷன் பெறும் நோக்கில் மட்டுமே செயல்பட்டதே தவிர நிரந்தரமாக தீர்வு காண வேறு இடத்தை தேர்வு செய்யவில்லை.
தற்போது அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களுக்கு மேலாகியும் உரக்கிடங்கு அமைப்பதற்குத் தேவையான இடம் வாங்குவது குறித்து அடிப்படை பூர்வாங்க பணிகள் கூட அதிகாரிகள் துவங்காதது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை களை தரம் பிரித்து உரமாக தயாரித்திட லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து வரு கிறது. இத்திட்டத்தினை செயல் படுத்திடவும், கெடிலம் ஆற்றை சுத்தப்படுத்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.