சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
ADDED : ஆக 14, 2011 10:30 PM
சென்னை:சமரசத்திற்குச் சென்ற, சப்-இன்ஸ்பெக்டரை நடுரோட்டில் தாக்கிய, காங்., கவுன்சிலரை, போலீசார் கைது செய்தனர்.
மறியலில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, கொடுங்கையூர், விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் செங்கை செல்லப்பா. சென்னை மாநகராட்சியில், 31வது வார்டு கவுன்சிலர். காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., மாநிலத் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் ரஞ்சித், 20, நேற்று மாலை தன் நண்பருடன் பைக்கில், சின்னாண்டி மடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், இவரை முந்திச் செல்ல முயன்றார். இதில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.ரஞ்சித், தன் அப்பா செல்லப்பாவுக்கு தகவல் கொடுத்தார். செல்லப்பா, தனது ஆதரவாளருடன் அங்கு வந்து, மகனுடன் தகராறில், ஈடுபட்ட கண்ணனை தாக்க முயன்றார். தகவலறிந்த கொடுங்கையூர் எஸ்.ஐ., பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று, சமரசத்தில் ஈடுபட்டனர். போலீசார், எதிர் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, கவுன்சிலர் செல்லப்பா அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.திடீரென, எஸ்.ஐ., பாலுவை, கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீசார் செல்லப்பாவை சுற்றி வளைத்தனர். போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்லப்பாவும், அவருடைய ஆதரவாளர்களும் மறியலில் ஈடுபட்டனர்.எஸ்.ஐ., பாலு கொடுத்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிந்து, கவுன்சிலர் செல்லப்பாவை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட தண்டபாணி, கார்த்திகேயன், சத்யா, தர்மராஜ் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.