Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

UPDATED : ஆக 13, 2011 03:05 AMADDED : ஆக 11, 2011 11:19 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ராஜிவ் படுகொலைக்கு காரணமான, மூன்று பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்து விட்டார்.

இதனால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991, மே 21ம் தேதி, தமிழகம், ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகள் நடத்திய, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய, இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு, பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன் உள்ளிட்ட 26 பேருக்கு, 1998, ஜனவரி 28ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் வாத்வா, தாமஸ், முஹம்மத் காத்ரி அடங்கிய பெஞ்ச், வழக்கை விசாரித்து, நளினி, முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும், 1999ம் ஆண்டு மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமிழக கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதில், நளினி மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூன்று குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், 2005, ஜூன் 21ம் தேதி, தன் கருத்தைத் தெரிவித்தது. பின், மறுபரிசீலனைக்காக இந்தக் கருத்து, 2011, பிப்ரவரி 23ம் தேதி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 8ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், தன் முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மூன்று பேரின் கருணை மனுக்களை, கடந்த வாரம் நிராகரித்தார். அவர்களுக்கு விதிக்கப்பட்ட, மரண தண்டனையை உறுதி செய்தார். இதனால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவது உறுதியாகிவிட்டது. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவரத்தை, ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

பீதி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் பீதி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள்: இந்த ஆண்டு மே மாதம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லார் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவர் மனீந்தர் சிங் பிட்டா மற்றும் பஞ்சாப் போலீஸ் அதிகாரி சுமேத் சிங் சைனியை கொல்ல சதித் திட்டம் தீட்டி, தாக்குதல் நடத்தியதற்காக புல்லாருக்கும், ஹரகந்த தாஸ் என்பவரை கொன்றதற்காக, மகேந்திரநாத் தாசுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us