ADDED : ஆக 03, 2011 01:23 AM
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று ஆடிப்பூர விழா நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல்களில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் முருகனை வழிபட்டனர். ஆடிப்பூர விழாவையொட்டி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று முன்தினமே திருத்தணிக்கு வந்த பக்தர்கள், திருமண மண்டபங்களிலும், குடில்களிலும் தங்கினர். நேற்று விடியற்காலை முதல், பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி, பலர் உடல்களில் அலகுகள் குத்தியும், பலர் மொட்டையடித்தும், மயில் காவடி, மலர் காவடி, பால் காவடி எடுத்து, பம்பை, உடுக்கை, சிலம்பாட்டத்துடன் முருகன் பாடல்களை பாடியபடி, படிகள் வழியே மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, முருக பெருமானை தரிசித்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக் கற்களாலான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் சண்முகர், ஆபத்சகாய விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.