அறக்கட்டளை நிலம் மோசடி: மாஜி அமைச்சர் பரிதியின் பி.ஏ., மீது போலீசில் புகார்
அறக்கட்டளை நிலம் மோசடி: மாஜி அமைச்சர் பரிதியின் பி.ஏ., மீது போலீசில் புகார்
அறக்கட்டளை நிலம் மோசடி: மாஜி அமைச்சர் பரிதியின் பி.ஏ., மீது போலீசில் புகார்

சென்னை: தர்மதோப்பு அறக்கட்டளை நிலத்தை அபகரித்து, தனியார் பில்டருக்கு விற்பனை செய்த, முன்னாள் அமைச்சர் பரிதியின் உதவியாளர் காக்கரின் உள்ளிட்டோர் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, போலீஸ் கமிஷனரிடம் அறங்காவலர் மனு அளித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கா ரெட்டி, 42; தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது: வில்லிவாக்கம் பகுதியில், பெரம்பூர் - புரசைவாக்கம் தாலுகாவில் ஏழு ஏக்கர் 46 சென்ட் நிலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, 1875ம் ஆண்டுக்கு முன், அரசாங்கத்தால், தர்மதோப்பு அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் 27ம் தேதி, தர்மதோப்பு சொத்தின் மீது போலி பட்டா வழங்கிய பெரம்பூர் - புரசை தாசில்தார்கள் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்திருந்தேன். அந்த மனு மீது போலீஸ் விசாரணை முடிந்து, கமிஷனர் அலுவலகத்தை விட்டு வெளியில் வரும்போது, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் பி.ஏ., காக்கரின், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சிட்கோ வாசு ஆகியோர், 'சாப்பிட வா, போகலாம்' என்று காரில் ஏற்றி, கடத்திச் சென்று தாசப்பிரகாஷ் எம்.சி.டி.எம்., பள்ளி எதிரில் உள்ள தி.மு.க., முன்னாள் பகுதிச் செயலர் சிட்டிபாபுவின் ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, 'இந்த சொத்தை அபகரிக்க போலி பட்டா, போலி ஆவணம் தயாரித்துள்ளதுடன், அதிகாரிகளுக்கு பணமும் கொடுத்துள்ளோம். மூன்று கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு டிரஸ்ட்கிட்ட கொடுத்துட்டு, சும்மா போகணுமா. இந்த பிரச்னையை இதோடு விட்டுவிடு. இல்லையெனில், உன்னையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் சாகடித்து விடுவோம்' என்று கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து, நான் இது தொடர்பான தகவல்களை சேகரித்தேன். அப்போது, காக்கரின் தலைமையில், பரிதி இளம்வழுதி உதவியுடன் டிரஸ்ட் நில அபகரிப்பு நடந்துள்ளது தெரிந்தது.
காக்கரின் இந்த நிலத்திற்கு 2001ம் ஆண்டுக்கான போலி பட்டாவை தயாரித்து, அதன் மூலம் 2004ம் ஆண்டு 11 பேரின் கூட்டுச் சதியுடன் ரிலீஸ் ஆவணம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இவ்வாறு போலி பத்திரம் தயாரிக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேலும் ஒரு போலி பட்டாவை தயாரித்துள்ளார். இந்த போலி பட்டா, போலி பத்திரங்களை பயன்படுத்தி, மேலும் மூன்று பத்திரங்களை அவர்கள் தயாரித்து, தோஷி பில்டர், யாஷி மதி தோஷிக்கு 5.92 கோடி ரூபாய்க்கு, டிரஸ்ட் நிலத்தை தனியார் சொத்து என விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 200 கோடி ரூபாய் மதிப்பு சொத்தை, காக்கரினிடம் இருந்து வெறும் 5.92 கோடி ரூபாய்க்கு தோஷி வாங்கியுள்ளார். இதற்கான பணம் அனைத்தையும், பல்வேறு வங்கிகளின் செக்குகள் மூலம், காக்கரின், தி.மு.க., முன்னாள் பகுதிச் செயலர் சிட்டிபாபு, மாவட்ட பிரதிநிதி வாசு மற்றும் பலருக்கு தோஷி கொடுத்துள்ளார். இப்பணப் பரிமாற்றங்கள் அனைத்தும், வில்லிவாக்கத்தில் பதிவு செய்த, '47 ஏ' ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அனைத்திலும், காக்கரின் உள்ளிட்டோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்.
தொடர்ந்து, அந்த நிலத்தில் நான்கு ஏக்கர் 84 சென்ட் நிலத்தை சாரதி தலைமையில் ரவுடிகள் வந்து ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்களையும் டிரஸ்டிகளையும் விரட்டி சுற்றுச்சுவர் கட்டினர். அப்போது, காக்கரின், சிட்டிபாபு ஆகியோர் தர்மதோப்பு அலுவலகத்திற்கு வந்து, 'இந்த சொத்து, தோஷி பில்டர் பினாமி மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு செல்கிறது; இதில் பிரச்னை செய்யக்கூடாது' என்று மிரட்டினர். நான் பயந்து கொண்டு புகார் அளிக்கவில்லை. நான், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தாசில்தார்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை இல்லாததால், கோர்ட் உத்தரவு பெற்றேன். அப்போதும் இன்ஸ்பெக்டர்கள் சரியாக புலன் விசாரணை செய்யவில்லை. அதே நேரத்தில், புகார் செய்த அன்று, அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் காக்கரின் இருந்த படம், அனைத்து 'டிவி' மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. இதனால், அறக்கட்டளை நிலத்தை அபகரிக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடந்தையாக இருந்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே, இப்புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, நீதித் துறையையும், பத்திரப்பதிவுத் துறையையும், வருவாய்த் துறையையும் ஏமாற்றி, போலி பத்திரம், பட்டா, ஆள் மாறாட்டம், லஞ்சம், கொலை மிரட்டல், கடத்தல், முத்திரைத்தாள் மோசடி செய்து, அறக்கட்டளை சொத்தை அபகரித்து, ஆக்கிரமிப்பு செய்துள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சரின் பி.ஏ., காக்கரின் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு உடந்தையாகச் செயல்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


