எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் நேற்று துவங்கின.
தமிழகத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், ஜூன் 30 முதல், ஜூலை 6ம் தேதி வரை, நடந்த பொதுக் கவுன்சிலிங்கின் மூலம் நிரப்பப்பட்டன. அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு, கடந்த மாதம் 22ம் தேதி, மாணவர் சேர்க்கை, அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் நடந்தன. இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கின. இதையொட்டி, நேற்று காலை, சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், எம்.பி.பி.எஸ்., பயிலும், 'சீனியர்' மாணவர்கள், 'ராக்கிங்'கிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலாமாண்டு மாணவர்களை, அவர்கள் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றனர்.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, 'டீன்' கீதாலெட்சுமி கூறியதாவது: எங்கள் கல்லூரியில், 'ராகிங்'கை தடுக்கும் வகையில், எனது தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவும், எம்.பி.பி.எஸ்., பயிலும், 'சீனியர்' மாணவர்கள், ஆறு பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 'ராகிங்' தொடர்பான புகார்களை, மாணவர்கள் இக்குழுக்களிடம் தெரிவிக்கலாம். புகார் நிரூபணமானால், சம்பந்தப்பட்ட மாணவர்களை, கல்லூரியிலிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்குவது, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 25 ஆயிரத்திலிருந்து, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் என, குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, தண்டனை வழங்கப்படும். இவ்வாறு கீதாலெட்சுமி கூறினார்.