Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கொத்தடிமையாக இருந்த 18 சிறுவர்கள் மீட்பு

கொத்தடிமையாக இருந்த 18 சிறுவர்கள் மீட்பு

கொத்தடிமையாக இருந்த 18 சிறுவர்கள் மீட்பு

கொத்தடிமையாக இருந்த 18 சிறுவர்கள் மீட்பு

ADDED : ஜூலை 28, 2011 01:55 AM


Google News

ஓசூர்: ஓசூர் அருகே, தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிக்காக, கொல்கத்தாவில் இருந்து கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்ட,18 முஸ்லிம் சிறுவர்களை போலீஸார் அதிரடியாக மீட்டுள்ளனர்.ஓசூர் அருகே, மத்திகிரி அடுத்த பொம்மன்டப்பள்ளியில், கர்னூர் சாலையில், விருதி கண்ட்ஷரக்சன் நிறுவனம் சார்பில், புதிய தொழிற்சாலை கட்டுமான பணி நடக்கிறது.

இந்த பணிக்காக, கான்ட்ராக்ட் புரோக்கர்கள் மூலம், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து, 18 முஸ்லிம் சிறுவர்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன், பொம்மன்டப்பள்ளிக்கு அழைத்து வந்தனர். இந்த சிறுவர்களுக்கு, தினமும் மூன்று வேளை சாப்பாடுடன் மாதம், 4,000 சம்பளம் வழங்குவதாக கூறி கட்டுமானப்பணியில் ஈடுப்படுத்தியுள்ளனர். தினமும், காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை, சிறுவர்களை கட்டாயப்படுத்தி கட்டுமானப்பணியில் ஈடுப்படுத்தியுள்ளனர். இதனால், வேலை செய்ய முடியாமல் கஷ்டப்பட்ட சிறுவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கெஞ்சியுள்ளனர். தனியார் நிறுவனத்தினர், சிறுவர்கள் வெளிநபர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதபடி, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் லட்சுமி நராயணன், ஓசூர் ஏ.எஸ்.டி., ரம்யா பாரதி, எஸ்.ஐ., ரஜினி மற்றும் போலீஸார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிறுவர்களை கட்டாயப்படுத்தி கட்டிட பணியில் ஈடுப்படுத்தி கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே போலீஸார், சிறுவர்களை மீட்டு விசாரித்தனர். அவர்கள், கொல்கத்தாவில் இருந்து அழைத்து வந்து கொத்தடிமைகளாக வேலை வாங்குவது பற்றி தெரிவித்தனர். கொத்தடிமைகளாக வேலை செய்த மைநூல்(14), ரோபி(14), ஹைரூல்(13), ரிசாகுல்கரீம்(14), பிசுவ்(13), அமீநுல்லா(15), ஹரிஷாபூல்(13), ஹாரீப்குல்(14), ஜாகீர்உசேன்(15), தூலால்(14), ஹவுசர் அலும்(16), தூலுசேக்(14), ஒபத்தூர் ரகுமான்(14), விந்துசேக்(15), பைஜூதின்(15), சாகிப்பூதின்(14), குவாசின்(14), சந்தம்உசேன்(14) ஆகிய 18 சிறுவர்களை போலீஸார் மீட்டு, தளி சாலையில் உள்ள நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரம் ஆசிரமத்தில் சேர்த்தனர். அங்கு, அவர்களை தற்காலிகமாக பராமரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுவர்களை அழைத்து வந்து கொத்தடிமைகளாக நடத்திய, புரோக்கரை போலீஸார் தேடி வருகினறனர். சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனத்தினரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில், சிறுவர்களுடைய பெற்றோர்களை வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us