ADDED : ஜூலை 26, 2011 10:24 PM
சென்னை:'கே.கே.நகர் போலீசில் நாளை ஆஜராக வேண்டும்' என, 'சன் டிவி' கலாநிதிக்கு, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சேலத்தைச் சேர்ந்த கந்தன் பிலிம்ஸ் உரிமையாளர் செல்வராஜ், 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படம் வினியோக உரிமை தொடர்பாக, 82.53 லட்ச ரூபாய் பணத்தைத் தராமல், மிரட்டல் விடுத்ததாக, 'சன் பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது, கே.கே.நகர் போலீசில், கடந்த 1ம் தேதி புகார் அளித்தார்.
இதையடுத்து, சக்சேனாவை, கடந்த 3ம் தேதி இரவு, 7.30 மணிக்கு, கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.கோர்ட் அனுமதிப்படி, சக்சேனாவை காவலில் எடுத்து, போலீசார் விசாரித்த போது, 'எனக்கு ஒன்றும் தெரியாது; என் முதலாளி (கலாநிதி) சொன்னதைத் தான் செய்தேன்' என்று பதிலளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கலாநிதிக்கு, கடந்த 11ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், 13ம் தேதி கலாநிதி ஆஜராகவில்லை.அவருக்கு பதிலாக, விசாரணை அதிகாரிகள் முன், அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி, விளக்கம் அளித்தனர். அப்போது, அளித்த மனுவில், கலாநிதி வெளிநாடு சென்றிருப்பதாகவும், 26ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக முடியாது. அதன் பின் ஒரு நாள் ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தனர். போலீசாரும் மனுவை ஏற்று, கால அவகாசம் அளித்தனர். போலீசார் அளித்த கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.வெளிநாடு சென்றிருந்த கலாநிதி, நேற்று இரவு வரை சென்னைக்கு வரவில்லை என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கே.கே.நகர் போலீசார், நாளை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என, கலாநிதிக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.- நமது சிறப்பு நிருபர்-