Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை பரப்புரை செய்து பரபரபாக்கினார் ஆஸி., மாணவி

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை பரப்புரை செய்து பரபரபாக்கினார் ஆஸி., மாணவி

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை பரப்புரை செய்து பரபரபாக்கினார் ஆஸி., மாணவி

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை பரப்புரை செய்து பரபரபாக்கினார் ஆஸி., மாணவி

ADDED : ஜூலை 26, 2011 12:20 AM


Google News

ஸ்ரீநகர் : காஷ்மீரில், 2008, 2009 ஆண்டுகளில், குறுஞ்செய்திகளுக்குத் தடை விதிக்கப்பட்ட போது, மக்கள் தங்களுக்கிடையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள, ஒரு தாளில் எழுதி சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பும் முறையை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் உருவாக்கினார்.

இதன்படி தகவல் அனுப்பியவர்கள், குறுஞ்செய்தித் தடையைப் பற்றி நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தனர்.



காஷ்மீரில் 2008ல் 40 ஏக்கர் நிலப் பகுதியை, அமர்நாத் கோவிலுக்கு வழங்கக் கோரி, காஷ்மீரில் ஜம்மு பகுதியில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, 2008, ஆகஸ்ட் 4ம் தேதி, காஷ்மீரில் ப்ரீபெய்டு மொபைல்போன்களில் குறுஞ்செய்திகள் தடை செய்யப்பட்டன. இடையில் சிறிது காலம் இத்தடை நீக்கப்பட்டாலும், 2009, நவம்பரில் பாதுகாப்பைக் காரணம் காட்டி, மீண்டும் இத்தடை அமலுக்கு வந்தது. இதனால், காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், இத்தடை, ஒரு வெளிநாட்டு மாணவியை வேறு வழியில் சிந்திக்க வைத்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலானா ஹன்ட் என்ற மாணவி, டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில், தத்துவத் துறையின் ஒரு பிரிவான அழகியல் படிப்பில் சேர்ந்து படிப்பதற்காக இந்தியா வந்தார்.



அவர் படிப்பில் சேர்ந்த 2009ல் தான், காஷ்மீரில் குறுஞ்செய்திகளுக்கான தடை அமல்படுத்தப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட ஹன்ட், மக்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக புதிய வழிமுறை ஒன்றை உருவாக்கினார்.

அதன்படி, ஒரு தாளின் ஒரு பக்கத்தில், மொபைல்போன் பயனாளிகள், மொபைல்போனில் என்ன செய்தி எழுதுவார்களோ அதை எழுத வேண்டும். அதில் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பெறுபவர், உண்மையில் இருக்கலாம் அல்லது கற்பனையாகக் கூட இருக்கலாம். அவர் நண்பராகவோ, குடும்ப உறுப்பினராகவோ, உடன் பணியாற்றுபவர்களாகவோ, அக்கம்பக்கத்தவர்களாகவோ கூட இருக்கலாம்.



தாளின் பின்பக்கத்தில், டில்லியில் உள்ள ஹன்ட்டின் முகவரி இருக்கும். இத்திட்டம், ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் முதலில் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மொத்தம் ஆயிரம் தாள்கள் வினியோகிக்கப்பட்டன.



இந்தப் புதிய முறை ஸ்ரீநகர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்,மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் கடவுளுக்கும் மக்கள் தாள் மூலம் தகவல் அனுப்பினர். பலர், குறுஞ்செய்தித் தடையைப் பற்றி நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தனர். அமைச்சர் சிதம்பரத்துக்கு ஒருவர் அனுப்பிய செய்தியில்,'காஷ்மீர் பிரிவினை வாதத் தலைவர் செய்யது அலி ஷா கிலானி ஆட்டோவில் தான் பயணம் செய்கிறார். அதனால், காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாக்களை தடை செய்யப் போகிறீர்களா?' என கிண்டலாகக் கேட்டிருந்தார்.



மற்றொரு செய்தியில்,'மொபைல்போனை யாரும் வாங்க வேண்டாம். எல்லோரும் புறாக்களை வாங்குங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து அலானா ஹன்ட் கூறுகையில்,'குறுஞ்செய்திகளுக்கான தடையால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பாதிக்கப்பட்டதைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன். அதன் பின் தான், இந்த முறையைக் கொண்டு வந்தேன். வினியோகிக்கப்பட்ட ஆயிரம் தாட்களில், 150 மட்டுமே என் முகவரிக்கு வந்து சேர்ந்தன' என்றார். அந்த 150 தாள்கள், டில்லியின் சராய், ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஜெர்மனியின் பெர்லின், நெதர்லாந்தின் மெமபெஸ்ட் ஆகிய நகரங்களில் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இதன் மூலம், காஷ்மீர் மக்களின் துயரங்கள் வெளியுலகுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த தொகுப்பு, தற்போது மின் புத்தகமாகவும் வீடியோவாகவும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுக்குப் பெருத்த வரவேற்பு கிட்டியுள்ளதாக ஹன்ட் தெரிவித்தார்.



- நவாஸ் குல் குவாங்கோ -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us