ADDED : ஜூலை 25, 2011 02:05 AM

மதுரை : ''உலகின் மிகப்பெரிய கதை மகாபாரதம்,'' என சொற்பொழிவாளர் இளம்பிறை
மணிமாறன் பேசினார்.
மதுரை, மலேசியா ஆயிர வைசிய மஞ்சப்புத்தூரார் சங்கம்,
பக்தசபை, மகளிர் பிரிவு சார்பில் 'மகாபாரத கதை வளர்ச்சிக்கு பெரிதும்
உதவியவர்கள் பீஷ்மர், அர்ஜூணன், துரியோதனன், கர்ணன்' என்ற தலைப்பில் 100
வது சொற்பொழிவு நடந்தது. நடுவர் இளம்பிறை மணிமாறன் பேசியதாவது: மகாபாரதம்
நடந்த கதை; மெருகேற்றப்பட்ட உவமானங்கள் இடம்பெற்றுள்ளன. ரிக், யஜூர், சாம,
அதர்வண வேதங்கள் அடர்ந்த மரங்கள் உள்ள காடு போன்றவை. அதை நான்கு வேதங்களாக
பகுத்தவர் வியாச முனிவர். அவரின் சம காலத்தில், அவரால் எழுதப்பட்டது
மகாபாரதம்.கிரேக்கத்தின் ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி காவியங்கள்போல்,
மகாபாரதம், ராமாயணம் இந்தியாவின் சொத்து. உலகின் மிகப்பெரிய கதை
மகாபாரதம்.துவாரயுகத்தில் ஒரு சகுனி இருந்தார். கலியுகத்தில் தெருவிற்கு,
தெரு சகுனிகள் உள்ளனர். வீரத்திற்கு அர்ஜூனன், ஒருங்கிணைக்கும் சக்திக்கு
பீஷ்மர், கொடையில் கர்ணன், நட்பிற்கு துரியோதனன் சிறந்தவர்கள். பகவான்
கிருஷ்ணர் தான் மகாபாரதத்தின் உண்மையான கதாநாயகன், என்றார்.
பேராசிரியர்கள் சீனிவாசன், ரேணுகாதேவி, மாது, மதுரை வானொலி நிகழ்ச்சி
அமைப்பாளர் ஞானசம்பந்தம் பேசினர். தலைவர் பிச்சை, செயலாளர் சூர்யமூர்த்தி,
எம்.ஏ.வி.எம்.எம். சபை தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்.