ADDED : ஜூலை 25, 2011 12:05 AM
புதுச்சேரி : கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து வாணிதாசன் பிறந்தநாள் விழாவினை ஆந்திர மகாசபையில் நடத்தின.
கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். இலக்கிய விருதுகளை அமைச்சர் கல்யாணசுந்தரம் வழங்கினார். கவிஞர் இளம்வழுதி 'கவிஞர் உலகில் ஒருவர்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இரவு 7 மணிக்கு பல்கலைக்கழக பேராசிரியர் இளமதி ஜானகிராமன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர்கள் விஜயலட்சுமி, தேவகி, மணிமேகலை, பூங்குழலி, மாநி, பங்கஜம்மாள், கலைமாமணி பூங்கொடி ஆகியோர் கவிதை வாசித்தனர். அழகப்பன் தலைமையில் நடந்த உரையரங்கம் நிகழ்ச்சியில், கலைமாமணி இலக்கியன் 'கவிஞர் கண்ட தமிழியம்' என்ற தலைப்பிலும் 'கவிஞர் கண்ட எழில் விருத்தம்' என்ற தலைப்பில் பாவலர் ராசசெல்வம் ஆகியோர் உரையாற்றினர்.
சங்கீத கலா நாட்டியாலயா சார்பில் கலைமாமணி ராஜமாணிக்கத்தின் வாணிதாசன் வழங்கிய இயலிசை நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. கலைமாமணி சுதர்சன், முனைவர் சிவ இளங்கோ ஆகியோர் 2009ம் ஆண்டிற்கான தொல்காப்பிய விருதினை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டனர். செங்கமலத் தாயார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.