/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க பாட்டில்களில் விலையைக் குறிப்பிட அரசு உத்தரவுமதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க பாட்டில்களில் விலையைக் குறிப்பிட அரசு உத்தரவு
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க பாட்டில்களில் விலையைக் குறிப்பிட அரசு உத்தரவு
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க பாட்டில்களில் விலையைக் குறிப்பிட அரசு உத்தரவு
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க பாட்டில்களில் விலையைக் குறிப்பிட அரசு உத்தரவு
ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்கு மதுபானக்கடைகள் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. வருவாய் ஈட்டுவதற்காகவே ஏராளமான கடைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் ஏராளமான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களான அமுதசுரபி, பாப்ஸ்கோ மூலம் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த குடிப் பிரியர்களும் மது பானங்கள் வாங்கி அருந்துகின்றனர். ஆனால் எந்த ஒரு மதுபாட்டில்கள் மீதும் அரசு விலை குறிப்பிடுவது கிடையாது. இது கடைக்காரர்களுக்கு வசதியாய் போய் விடுகிறது. இதனால் ஒவ்வொரு கடையிலும் வெவ்வேறு விதமாக விலைகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. பீர் வகைகளாக இருந்தாலும், ஹாட் டிரிங்ஸ்சாக இருந்தாலும் விலையேற்றி தான் விற்கப்படுகிறது. சில கடைகளில் ஊழியர்கள் சொல்லும் விலைக்குத் தான் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து சரக்கை பெறும் குடிப்பிரியர்கள், கடைகளில் 'பில்' கேட்டாலும் கொடுக்கப்படுவதில்லை. ஆளுக்கு ஏற்றார் போல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான புகார்கள் எழுந்தன. 'புல்' போதையில் சென்று மதுபாட்டில்கள் வாங்குபவர்களிடம் பணத்தைக் கறந்து விடுகின்றனர். குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து வரும் குடிமகன்களின் தலையில் விலையேற்றி தண்ணி காட்டி வருகின்றனர். காலையில் ஒரு விலை கொடுத்து வாங்குபவர்கள், மாலையில் ஒரு விலைக்கு வாங்க வேண்டிய அவலம் அரங்கேறி வருகிறது. தற்போது, இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு பாட்டில் மீதும் (எம்.ஆர்.பி.) அதிக பட்ச விற்பனை விலை குறிப்பிடப்பட உள்ளது. உள்ளூரில் உற்பத்தியாகும் மதுபாட்டில்கள் மட்டுமில்லாமல், வெளியூரில் இருந்து உற்பத்தியாகி புதுச்சேரிக்கு வரும் மதுபாட்டில்கள் மீதும் விலை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு ஒப்புதல் அளித்து விட்டது. இந்த நடவடிக்கையில் கலால் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது.
இருந்த போதும், நடைமுறைப்படுத்த காலதாமதமாகும் என்பதால் ஒரு மாதத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்து விடும் என தெரிகிறது.
-நமது சிறப்பு நிருபர்-