
பாதகமான செய்திகள் வந்தால் பலன்; தி.மு.க., புது கணக்கு! ''அரசு வழங்கிய காரை ஓரங்கட்டிட்டு, வாடகை சொகுசு கார்ல உலா வந்துட்டு இருக்காருங்க...!'' என, முதல் ஆளாக பேசத் துவங்கினார் அந்தோணிசாமி.
''எந்த துறை அதிகாரி ஓய்...'' என விசாரித்தார் குப்பண்ணா.
''விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பயன்படுத்திட்டு இருந்த அரசு கார், 'ரிப்பேர்'னு சொல்லி ஓரங்கட்டிட்டாங்க...
''இவரோட செயல்பாடு சரியில்லைன்னு, ஏற்கனவே இருந்த கலெக்டர், கல்வித்துறை செயலர்கிட்ட சொல்லிருக்கார்... அதை மனசுல வைச்சிட்டு இருந்த செயலர், சமீபத்துல நடந்த, சி.இ.ஓ., கூட்டத்துல மாவட்ட அதிகாரியை கண்டிச்சிருக்காருங்க... கல்வியில பின் தங்கியிருக்கற மாவட்டத்துக்கு இப்படி ஒரு அதிகாரியான்னு, ஆசிரியர்கள் புலம்பறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஹலோ... யாரு... குப்புசாமியா... அப்புறம் பேசு பா...'' என்றபடியே, தன், 'மொபைல்' அழைப்பைத் துண்டித்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
''வனத்துறை அதிகாரி ஒருத்தர், 'பசையுள்ள' இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' வாங்க முயற்சி செஞ்சுட்டு இருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.
''விவரமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''வனச்சரக அதிகாரி ஒருத்தர், கொடைக்கானல்ல வேலை செஞ்சப்ப, தனியாருக்கு ஆதரவா மரங்களை வெட்ட உதவியிருக்காரு பா... இது தெரிஞ்சதும், அவரை சமீபத்துல திருச்சி மாவட்டத்துக்கு, 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க... இப்ப, பொள்ளாச்சிக்கு, 'டிரான்ஸ்பர்' கேட்டு, மேலிட உதவியை நாடியிருக்காரு...
''முக்கியமான இடத்துல அவருக்கு போஸ்டிங் தரக்கூடாதுன்னு, விஜிலென்ஸ் தரப்புல பரிந்துரை செஞ்சிருக்காங்க... ஆனாலும், அதிகாரி முயற்சியை கைவிடலை பா...'' என்றபடியே, ''முஸ்தபா... முஸ்தபா...'' என்ற சினிமா பாடலை முணு முணுத்தார் அன்வர்பாய்.
''கட்சியில பிரச்னைகள் இருக்கறதா செய்திகள் வரட்டும்னு நினைக்கறா ஓய்...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் குப்பண்ணா.
''என்ன சொல்லுதீரு வே... எந்தக் கட்சியில இதுமாதிரி நினைப்பாவ...'' என, குறுக்கு கேள்வி கேட்டார் அண்ணாச்சி.
''தி.மு.க., விவகாரத்தை சொன்னேன்... 'தி.மு.க.,வுல தலைமையை கைப்பத்த வாரிசுகள் மோதல்... மாவட்டங்களை கலைக்கறதால நிர்வாகிகள் அதிருப்தி, கருத்து வேறுபாடு'ன்னு செய்திகள் வரட்டும்னு, கட்சித் தலைமையே விரும்பறதாம் ஓய்... அதுக்கு அரசியல் ரீதியா காரணம் இருக்குன்னும் சொல்றா...'' என்றார் குப்பண்ணா.
''அதென்ன காரணம்...'' என்றார் அண்ணாச்சி.
''அ.தி.மு.க., அரசு வந்ததும், நில மோசடி, மிரட்டல்னு பல வழக்குகள், தி.மு.க.,வினர் மீது வந்துண்டு இருக்கு... இதுல, கட்சியினர் ரொம்பவே சிரமத்துக்கு ஆளாக வேண்டியதிருக்கு... அதனால, உட்கட்சி பிரச்னை, பதவி தகராறுங்கற மாதிரி பெரிய அளவுல செய்திகள் வந்தா,
'கட்சித் தலைமைக்கே பிரச்னை... அதனாலே நமக்கு உதவ முடியலே'ன்னு கட்சிக்காரங்க நினைப்பாங்க, அது, கட்சிக்கு லாபமா முடியும்னு நினைக்கறாளாம் ஓய்...'' எனக் கூறிவிட்டு, குப்பண்ணா நடையைக்கட்ட, மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.