5 மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம் : விரிவுபடுத்த முதல்வர் உத்தரவு
5 மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம் : விரிவுபடுத்த முதல்வர் உத்தரவு
5 மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம் : விரிவுபடுத்த முதல்வர் உத்தரவு
ADDED : ஜூலை 24, 2011 07:57 PM
சென்னை:'தமிழகத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற தொட்டில் குழந்தை திட்டம், விழுப்புரம், கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.
இதற்காக, 47.45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் அமைக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:தமிழகத்தில் கடந்த, 1992ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில், 'தொட்டில் குழந்தை திட்டம்' துவக்கினேன். இதன் மூலம், பெண் சிசுக் கொலை குறைந்தது. மீண்டும், 2001ல் ஆட்சிக்கு வந்ததும், மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.இதற்காக, குழந்தை வரவேற்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு போதிய அளவு பணியாளர்கள், வெப்ப அளிப்பான் கருவி, உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன. மேலும், இம்மாவட்டங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சமூக நல அலுவலகங்களில் 188 தொட்டில் மையங்கள் துவக்கப்பட்டன.இத்திட்டம் இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றுள்ளது. இத்திட்டம் மூலம், இதுவரை 3,200க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காப்பற்றப்பட்டதோடு, 582 ஆண் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும், 2,460 ஆண், பெண் குழந்தைகள் உள்நாட்டிலும், 197 குழந்தைகள் வெளிநாட்டிலும், 18 குழந்தைகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர்; 160 குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரிடத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதன் பயனாக, தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்ட மாவட்டங்களில், பெண் குழந்தைகள் விகிதம் அதிகரித்துள்ளது 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், கடலூர், அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில், பெண் குழந்தை விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது தான் இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.எனவே, மேற்கண்ட மாவட்டங்களில், 'தொட்டில் குழந்தை திட்டம்' விரிவுபடுத்த ஆணையிட்டுள்ளேன். இதற்காக, 47.45 லட்ச ரூபாய் மதிப்பில், குழந்தைகள் வரவேற்பு மையங்கள் அமைக்கப்படும். ஐந்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் இல்லம், காப்பகங்களில் தொட்டில்கள் வைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.