Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் கோயில் அருகே சுகாதார சீர்கேடு

குற்றாலம் கோயில் அருகே சுகாதார சீர்கேடு

குற்றாலம் கோயில் அருகே சுகாதார சீர்கேடு

குற்றாலம் கோயில் அருகே சுகாதார சீர்கேடு

ADDED : ஜூலை 24, 2011 01:34 AM


Google News

குற்றாலம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் குற்றாலாநாத சுவாமி கோயில் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை சீர் செய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், இதயத்திற்கு இதமாக தென்றல் காற்றும் வீசும்.

இந்த மூன்று மாதங்களில் குற்றாலம் மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், சிற்றருவி, புலியருவி போன்ற அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.மெயின் அருவியில் இருந்து விழும் தண்ணீர் தடாகத்தில் விழுந்தபின் ஒரு பகுதி ஆற்றுக்கும், மற்றொரு பகுதி விவசாய தேவைகளுக்காகவும் குற்றாலநாதர் கோயில் வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு விவசாயத்திற்கு நீர் செல்லும் ஓடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைப்பதற்காக ஓடையின் மேற்பகுதி தோண்டப்பட்டு அடைப்பை சீர் செய்து விட்டனர்.



ஆனால் கழிவுநீரோடை மூடப்படாமல் உள்ளது. அருவிகளில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் ஏற்படும் போது இந்த ஓடை நிறைந்து ரோடுகளிலும் வெள்ள நீர் செல்லும். மேலும் இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த ஓடை தெரியாது. ரோடு என நினைத்து நடந்து அருவிக்கரைக்கு செல்பவர்கள் அடிக்கடி ஆபத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள அன்னதான மண்டபம் மேற்கு பகுதியை சுற்றுலா பயணிகள் சமையல் கூடாரமாக பயன்படுத்தி வந்தனர்.இந்த சமையல் கூடம் தற்போது களையிழந்து குப்பை மேடாகவும், டாஸ்மாக் பாட்டில்கள் ஆக்ரமித்து பாராகவும், சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வெளிக்காற்றை சுவாசிக்க முடியாமல் மூக்கையும், முகத்தையும் மூடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே குற்றாலம் டவுன் பஞ்.,நிர்வாகம் சுகாதார சீர்கேட்டை உடனடியாக சீர்செய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us