போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி நூதன மோசடி : நால்வர் கைது
போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி நூதன மோசடி : நால்வர் கைது
போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி நூதன மோசடி : நால்வர் கைது

திருப்பூர் : போலி கிரெடிட் கார்டு பயன்படுத்தி, நகை கடையில் மோசடி செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர்; இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி மற்றும் பெண் ஒருவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.பி., உத்தரவுப்படி, காங்கயம் டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து மகன் முருகானந்தம் (25), பரமக்குடியை சேர்ந்த இருதயம் மகன் ஆரோக்கியசாமி (34), சென்னை காவேரி நகரை சேர்ந்த வெங்கடசுப்ரமணியன் மகன் விஜயகுமார் (24), பொள்ளாச்சியை சேர்ந்த நாராயணன் மகன் சுரேஷ் (28) ஆகியோர், முத்தூர் மற்றும் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போலீசாரிடம் சிக்கினர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த ராஜ்குமார் (38), திருப்பூரை சேர்ந்த ஸ்வாதி (25) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
எஸ்.பி., பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் பங்க், ஓட்டல், ஜவுளி மற்றும் நகை கடைகளில் பணம் தராமல், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், பெட்ரோல் பங்க் சிலவற்றுக்கு சென்று, அங்குள்ள ஊழியர்களிடம் பேரம் பேசி, அந்த பங்கில் பதிவாகும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை சேகரித்துள்ளனர். அதன்பின், அதிக பண வசதியுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து, சங்கேத குறியீடுகளுடன் போலியான கிரெடிட் கார்டுகளை உருவாக்கி, அந்நபர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இவர்கள், அபகரித்துள்ளனர்.
நகை கடைகளுக்கு சென்று, நகைகளை வாங்கி விட்டு, போலி கார்டுகளை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 2009 முதல் பயன்படுத்தப்பட்ட போலி கார்டுகளில், இதுவரை 30 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது; ஒரு கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, சென்னை, பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மோசடி நடந்துள்ளது; முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் இன்னும் பிடிபடவில்லை. இக்கும்பலுடன் தொடர்புடைய ஸ்வாதி குறித்தும் விசாரணை நடக்கிறது, என்றார்.