ஒரே இடத்தில் தொடரும் சார்-பதிவாளர்கள்; பட்டியல் தயாரிக்கிறது பதிவுத்துறை
ஒரே இடத்தில் தொடரும் சார்-பதிவாளர்கள்; பட்டியல் தயாரிக்கிறது பதிவுத்துறை
ஒரே இடத்தில் தொடரும் சார்-பதிவாளர்கள்; பட்டியல் தயாரிக்கிறது பதிவுத்துறை
ADDED : ஜூன் 17, 2025 04:33 AM

சென்னை : ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியில் இருக்கும் சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் குறித்த விபரங்களை, பட்டியலாக தயாரிக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 587 சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில், அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில் பணிபுரிய சார் - பதிவாளர்களிடம் போட்டி காணப்படுகிறது.
அதேநேரம், பிரச்னைகள் ஏற்படக்கூடிய இடங்களில் பணிபுரிய தயங்குகின்றனர்.
இதனால், 200க்கும் மேற்பட்ட இடங்களில், முழுநேர சார் - பதிவாளர்களுக்கு பதிலாக உதவியாளர்களே பதிவு பணியை மேற்கொள்கின்றனர். பொதுவாக, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் இருக்க முடியாது.
ஆனால், மேலதிகாரிகள் ஒத்துழைப்புடன் சில சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியில் இருப்பதாக புகார் எழுந்துஉள்ளது.
இதையடுத்து, ஒரே அலுவலகத்தில் நீண்ட காலமாக உள்ள சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் குறித்த விபரங்களை பட்டியலாக அனுப்பும்படி, பதிவு டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு நீண்ட காலம் இருப்பவர்கள் மீது நிலுவையில் உள்ள புகார்கள், வழக்குகள் குறித்த விபரங்களையும் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவுப்படி இந்த விபரங்கள் திரட்டப்படுவதாக, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.