சபரிமலையில் இருமுடி ஏந்திய 10 பிக்பாக்கெட்கள் சிக்கினர்
சபரிமலையில் இருமுடி ஏந்திய 10 பிக்பாக்கெட்கள் சிக்கினர்
சபரிமலையில் இருமுடி ஏந்திய 10 பிக்பாக்கெட்கள் சிக்கினர்
கொச்சி : இருமுடியை தலையில் ஏந்தி, பக்தர்களை போல் நடித்து சபரிமலையில் சுற்றி வந்த பிக்பாக்கெட்காரர்கள் 10 பேரை, மாவட்ட நீதிபதி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கேரளா மட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். இக்கோவிலின் நடை ஒவ்வொரு மாதமும், மாத பூஜை மற்றும் உற்சவம் போன்றவற்றுக்காக திறக்கப்படும். பூஜைகள் மற்றும் உற்சவம் முடிந்ததும் கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக, அய்யப்பன் கோவிலில் நடை, கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டு, 21ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர் ஒருவரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற நபரை, அவர் கையும் களவுமாக பிடித்தார். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பலர் இதுபோன்று பக்தர்கள் வேடத்தில் சபரிமலையில் இருப்பது தெரிய வந்தது. உஷாரான போலீசார், தீவிர வேட்டை நடத்தி மேலும் 9 பேரை பிடித்தனர்.
அவர்கள் அய்யப்ப பக்தர்களை போல வேடமணிந்தும், தலையில் இருமுடி ஏந்தியும் அங்கு வந்ததாகவும், தலையில் உள்ள இருமுடியை துண்டால் இறுக கட்டி விட்டு, விரல்களில் மறைத்து வைத்திருக்கும் பிளேடை பயன்படுத்தி, பிக்பாக்கெட் அடித்ததும் தெரியவந்தது. அவர்கள், திருவனந்தபுரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 48, கிருஷ்ணன் நாயர், 55, தங்கச்சன், 46, காளிதாசன், 56, அந்தோணி, 75, சந்திரன், 46, அரிலால், 41, சிவானந்தன், 58, கிருஷ்ணன் குட்டி, 53, மற்றும் பி.வி.சிவானந்தன், 55, ஆகியோர் என்பது விசாரணையில் தெரிந்தது. மேலும், அவர்களில் சிலர் ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். இச்சம்பவம் சபரிமலையில் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.