ADDED : ஜூலை 17, 2011 01:18 AM
திருப்பூர் : காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடத்துக்கு தேர்வானவர்கள், இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளதால், அவர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் 40க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர், 100க்கும் மேற்பட்ட சத்துணவு உதவியாளர், சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த பிப்., மாதத்தில் காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல், ஊராட்சி ஒன்றியத்தில் நடத்தப்பட்டு, ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன் பின், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இவர்களுக்கான பணி உத்தரவு வழங்கப்படவில்லை. தற்போது மீண்டும் பள்ளிகள் செயல்பட துவங்கியும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களை நியமிப்பதற்கான அறிவுப்பு எதுவும் வரவில்லை. இதனால், நேர்காணலில் தகுதி பெற்று, பணிக்கு தேர்வானவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சத்துணவு ஊழியர்களுக்கான பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருப்பதால், மையங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.