தலைமை ஆசிரியர் உட்பட 20 பேர் கைது:பள்ளி வளாகத்தில் புகுந்து தாக்குதல்
தலைமை ஆசிரியர் உட்பட 20 பேர் கைது:பள்ளி வளாகத்தில் புகுந்து தாக்குதல்
தலைமை ஆசிரியர் உட்பட 20 பேர் கைது:பள்ளி வளாகத்தில் புகுந்து தாக்குதல்
ADDED : ஜூலை 15, 2011 12:43 AM
திருச்சி:திருச்சியில் பள்ளிக்குள் புகுந்த ரவுடிக் கும்பல், நான்கு ஆசிரியர்களை தாக்கிய விவகாரத்தில், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி, வண்ணாரப்பேட்டையில் சி.இ., என்ற அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் விசாரணை நீதிமன்றத்திலும், கல்வித் துறையிலும் நிலுவையில் ஏற்கனவே உள்ளன. ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை, 10.15 மணிக்கு, பள்ளி இடைவேளையின் போது, பள்ளிக்குள் திடீரென 50க்கும் மேற்பட்டோர் புகுந்து, பள்ளி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த லாமேக், 54, பன்னீர்செல்வம், 51, பிரபு, 46, பிரேம்குமார், 38, ஆகிய நான்கு ஆசிரியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்; அவர்களிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கவும் முயற்சித்துள்ளனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தாக்குதல் நடத்தியவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.தாக்குதலில் காயம் அடைந்த ஆசிரியர்கள் நான்கு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சி.இ., துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ், 40, என்பவர் அடியாட்களை கூட்டி வந்து, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.இதையடுத்து, தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் மற்றும் அவருக்கு உதவிய 19 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் லாமேக் கூறியதாவது:பள்ளியில் நடந்த ஊழல் வெளியே வந்ததால், ஆத்திரத்தில் பள்ளி நிர்வாகிகள் எங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது பள்ளியில் அனுமதியின்றி நடந்து வரும் ஹாஸ்டல் குறித்து செய்தி வெளியானதுக்கு, இதற்கு நாங்கள் தான் காரணம் என்று, திட்டமிட்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ், ஆசிரியர் எல்ஜின் மற்றும் அவர் ஆதரவாளர்கள் தான் காரணம்' என்றார்.ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பிலோ, குறிப்பிட்ட நான்கு ஆசிரியர்களும் மாணவியரிடம் தவறாக நடந்து கொண்டதால், பெற்றோர் தாக்கியுள்ளனர் என்று தெரிவித்தனர்.