தனியார் நிறுவன பெண் அதிபரைகடத்திய வழக்கில் டி.எஸ்.பி.,கைது
தனியார் நிறுவன பெண் அதிபரைகடத்திய வழக்கில் டி.எஸ்.பி.,கைது
தனியார் நிறுவன பெண் அதிபரைகடத்திய வழக்கில் டி.எஸ்.பி.,கைது
ADDED : ஜூலை 15, 2011 12:41 AM
கோவை:'பாசி பாரக்ஸ்' நிதி நிறுவன பெண் இயக்குனரை கடத்தி, 2.95 கோடி ரூபாய் பறித்த வழக்கில், 11 மாதம் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி., ராஜேந்திரன், சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது, பாசி பாரக்ஸ் நிதி நிறுவனம். இந்நிறுவனம் 500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் பெற்றனர்.
இச்சூழலில், விசாரணை அதிகாரிகள் டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் தன்னிடமிருந்து 2.95 கோடி ரூபாய் பறித்து விட்டதாக, பாசி நிறுவன பெண் இயக்குனர் கமலவள்ளி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் கொடுத்தார். தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை, கடந்த ஆண்டு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்; இன்ஸ்பெக்டர் சண்முகையா கோவை கோர்ட்டில் சரணடைந்தார். டி.எஸ்.பி., ராஜேந்திரன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்த பாசி மோசடி வழக்கு, கடந்த மாதம் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, கோவை வந்த சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், 11 மாதம் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி., ராஜேந்திரனை கைது செய்தனர். கோவை சி.பி.ஐ.,கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐந்து நாள் கஸ்டடி கேட்டு மனுதாக்கல் செய்தனர். நீதிபதி ராமமூர்த்தி மனுவை விசாரித்து ஐந்து நாள் சி.பி.ஐ., காவலுக்கு அனுமதி அளித்தார்.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவே, டி.எஸ்.பி.,ராஜேந்திரன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.