ADDED : ஜூலை 13, 2011 01:44 AM
தேவகோட்டை : தேவகோட்டையில் 100, 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன.
கடை வீதிகளில் நடமாடிய கள்ளநோட்டு தற்போது வங்கி மூலமாகவே கொடுக்கப்படுகிறது. தேவகோட்டை ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகே ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., உள்ளது. இங்கு இரு தினங்களுக்கு முன்பு சிறப்பு எஸ்.ஐ.,ஒருவர் ரூ. 2 000 எடுத்துள்ளார். மிஷினில் இருந்து வந்த 500 ரூபாயில் ஒன்று கள்ள நோட்டாக இருந்தது. இது குறித்து தேவகோட்டை வங்கி கிளை மேலாளரிடம் புகார் செய்தார். விசாரிப்பதாக கூறி அவரை திருப்பி அனுப்பினார். மீண்டும் நேற்று வங்கியில் சென்று கேட்டபோது எஸ்.ஐ., க்கு பாங்க் நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை. டி.எஸ்.பி.,யிடம் புகார் செய்ததை தொடர்ந்து கிளை மேலாளர் ஏ.டி.எம்., பணத்தை வைத்த சிவகங்கை தலைமைக்கு தகவல் தெரிவித்து அவர்களின் ஆலோசனைபடி கள்ள நோட்டை பெற்றுக்கொண்டு ஒரிஜினல் ரூபாயை மேலாளர் வழங்கினார்.
இதே போல் சில தினங்களுக்கு முன் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் ஒருவர் தேவகோட்டை ஸ்டேட் பாங்கில் பணம் எடுத்தார். 500 ரூபாய் கட்டு வழங்கப்பட்டது. பணத்தோடு காரைக்குடியில் கடனுக்காக பணம் கட்ட சென்றபோது கள்ளநோட்டு இருப்பது தெரிய வந்தது. பணத்தோடு அவர் தேவகோட்டை வங்கியில் வந்து கேட்டார். முதலில் மறுத்த அவர்கள், பணக்கட்டில் வங்கி சிலிப் இருப்பதை காண்பித்து கேட்டபோது, வேறு ஒரு வங்கியில் இருந்து பணம் வந்ததாக, கூறி வேறு பணத்தை கொடுத்தனர்.