Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு நிலம் அபகரிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தி.மு.க.,வினர் மீது புகார்

எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு நிலம் அபகரிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தி.மு.க.,வினர் மீது புகார்

எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு நிலம் அபகரிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தி.மு.க.,வினர் மீது புகார்

எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு நிலம் அபகரிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தி.மு.க.,வினர் மீது புகார்

ADDED : ஜூலை 13, 2011 01:41 AM


Google News

பெரம்பலூர் அருகே, எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளை மிரட்டி, தி.மு.க., பிரமுகர்கள் இருவர், அதிகாரிகள் துணையுடன், நிலத்தை வாங்கியதாக, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று பெரம்பலூர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள், எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு, நாரணமங்கலம் கிராமத்தில், எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலைக்கு நிலம் பெறுவது தொடர்பாக, கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிர்வாகியும், தி.மு.க., பிரமுகர்களுமான செல்வராஜ் மற்றும் செந்தில்முருகன் ஆகிய இருவரும், என்னை அணுகியபோது, நான் நிலத்தை தர முடியாது என்றேன். என்னை மீறி, நிலத்தை அளந்து சிவப்புக் கொடி நட்டனர்.



நான், அவர்களை சந்தித்து விவரத்தை கேட்டபோது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் ஆட்கள் மூலம் என்னை அடிப்பதாக மிரட்டினர். நான் மீண்டும், என் நிலத்தை தர முடியாது என்ற போது, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், அப்போதிருந்த மாவட்ட எஸ்.பி., பெரம்பலூர் இன்ஸ்பெக்டர், ஆர்.ஐ., மகேஸ்வரன், உளவுப்பிரிவு போலீஸ் அங்குசாமி ஆகிய அரசு அதிகாரிகள் துணை கொண்டு, என்னை மிரட்டினர். நான் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே என் மீது தேவையில்லாமல், போலீசில், தீண்டாமை வழக்கு பதிவு செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது வீட்டில் அம்மா மற்றும் அக்காவை , கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிர்வாகியும், தி.மு.க., பிரமுகர்களுமான செல்வராஜ் மற்றும் செந்தில்முருகன் ஆகிய இருவரும் மிரட்டியுள்ளனர். என் அக்காவும், மாமாவும் அழுதுகொண்டே இதை என்னிடம் தெரிவித்தனர்.



அதன்பின், மிரட்டலுக்கு பயந்து நிலத்தை தருவதாக ஒப்புக்கொண்டேன். ஆனால், நிலத்தின் விலையை அவர்களே முடிவு செய்து, சிறையில் இருந்து ஜாமினில் அழைத்து வந்து, இரவு 9.30 மணிக்கு, ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கையெழுத்து வாங்கினர். முந்தைய, தி.மு.க., அரசு அலுவலர்கள் இதற்கு உடந்தையாக செயல்பட்டதை தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us