கடலில் கூண்டுகளில் மீன் வளர்ப்பு திட்டம் துவக்கம்
கடலில் கூண்டுகளில் மீன் வளர்ப்பு திட்டம் துவக்கம்
கடலில் கூண்டுகளில் மீன் வளர்ப்பு திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 13, 2011 12:55 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடல் பகுதியில் கூண்டு மீன் வளர்ப்பு குறித்த ஆராய்ச்சிக்காக, நேற்று 5,000 மீன் குஞ்சுகள் கூண்டில் விடப்பட்டன.
மத்திய அரசின் தேசிய கடல்வள ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், கடல்சார் விஞ்ஞானிகள், கடலில் கூண்டு வைத்து மீன் வளர்க்கும் திட்டம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, தமிழகத்தில் ராமேஸ்வரம் ஓலைக்குடா, ஆந்திரா மாநிலம் நெல்லூர், அந்தமான் போர்ட்பிளேயர் கடல் பகுதியில், கடலில் நான்கு கூண்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ராமேஸ்வரத்தில், நேற்று ஒரு கூண்டில், ' சீபாஸ் ' எனப்படும் கொடுவாய் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதற்காக, சென்னையிலிருந்து, 5,000 கொடுவாய் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டன. சோதனை அடிப்படையில் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியில், தேசிய கடல்வள ஆராய்ச்சிக் கழக திட்ட அலுவலர்கள் சாந்தகுமார், ராஜன்பிரபு ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கூறியதாவது: கூண்டில் மீன் வளர்ப்பு திட்டம் மீனவர்களுக்கு வரப்பிரசாதம். கூண்டில் விடப்பட்ட மீன்களின் ஒவ்வொன்றின் எடை, 6 மாதங்களில் ஒன்று முதல் ஒன்றேகால் கிலோ வரை இருக்கும். ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் தொழிலாக, எதிர்காலத்தில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டம் உருவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னையில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வரப்பட்ட மீன் குஞ்சுகள் பெரும்பாலும், இறந்து போயிருந்தன. அதிக வெப்பத்தினாலும், பிளாஸ்டிக் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து கொண்டு வந்ததாலும், மீன் குஞ்சுகள் இறந்து போயிருக்கலாம் என, மீனவர்கள் தெரிவித்தனர்.