ADDED : ஜூலை 12, 2011 12:07 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான கைதியை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துக்குமார்(34). ஆலங்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலம் கொலை வழக்கில் தொடர்புடைய இவரை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி நாள்தோறும் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் வெளிவந்த இவர் தலைமறைவானார். இதையடுத்து முத்துக்குமாரை போலீஸார் தேடிவந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அறந்தாங்கி அருகே பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி வாலிபர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவகதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் தலைமறைவான கொலை வழக்கு கைதி முத்துக்குமார் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், முத்துக்குமாரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.