ராணுவ இன்ஜினியரிங் பிரிவு கான்ட்ராக்டர்கள் வேலை நிறுத்தம்
ராணுவ இன்ஜினியரிங் பிரிவு கான்ட்ராக்டர்கள் வேலை நிறுத்தம்
ராணுவ இன்ஜினியரிங் பிரிவு கான்ட்ராக்டர்கள் வேலை நிறுத்தம்
குன்னூர் : குன்னூர் வெலிங்டன் ராணுவ இன்ஜினியரிங் பிரிவு கட்டட கான்ட்ராக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ராணுவ எல்லைக்குள் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்தன.
'கட்டுமானப் பணிகளுக்குரிய பில் தொகையில், கணக்குப்பிரிவு அதிகாரிகள் பெரும் தொகையை காரணமின்றி பிடித்தம் செய்கின்றனர்' என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, வெலிங்டனிலுள்ள ராணுவ இன்ஜினியரிங் பிரிவு கான்ட்ராக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி பேரக்ஸ் பகுதியிலிருந்து ராணுவப் பொறியியல் பிரிவு அலுவலகம் வரை ஊர்வலமாக வந்த கான்ட்ராக்டர்கள், ராணுவப் பிரிவு இன்ஜினியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
சங்கத் தலைவர் சுந்தர்ராஜ் கூறுகையில், ''கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், அவற்றை கொண்டு வருவதில் ஏற்படும் சிரமத்தால், பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது; தாமதத்திற்குரிய காரணத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியிருந்தும்; எங்கள் நிலையை புரிந்து கொள்ளாமல், காலதாமதத்தை காரணம்காட்டி, டெண்டர் தொகையில் கணிசமான தொகையை பிடித்தம் செய்கின்றனர். இதனால், பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது; தொடர்ந்து பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில், நாடு முழுக்க உள்ள 62 இன்ஜினியரிங் பிரிவு கான்ட்ராக்டர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,'' என்றார். ஊர்வலத்தில், 40 க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் பங்கேற்றனர். திருச்சி, தஞ்சை, கோவை, சென்னை, பெங்களூருவிலுள்ள ராணுவப் பொறியியல் பிரிவினரும் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ராணுவ எல்லைக்குள் கட்டுமானப் பணிகள் முடங்கின.